காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பேய் மழை: ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியது வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான தென்மாவட்டங்கள் மீட்பு பணியில் முப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகம்




வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது.



வெள்ளத்தில் தத்தளிப்பு

தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய் மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள், வீடுகள், கோவில்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர்.

காயல்பட்டினத்தில் 95 செ.மீ. பதிவு

நேற்று முன்தினம் பெய்ய ெதாடங்கிய மழை நேற்றும் நீடித்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 62 செ.மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 38 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பஸ், ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துகள் அடியோடு ரத்தாகிவிட்டன. வெளியூர்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ஏராளமான பஸ்கள் சாலைகளிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

அதேபோல் ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மதுரையில் நிறுத்தப்பட்டது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு

பெருமழையால் பாதித்த இடங்களில் வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள் உணவு, தண்ணீரின்றி தவிக்கின்றனர். அதேபோல் மின்சாரம், தொலை தொடர்பு இணைப்புகளும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் ஆற்றின் வழியோர கிராமங்களில் தண்ணீர் புகுந்து உள்ளது. குறிப்பாக நெல்லை மாநகரில் ஜங்சன், பாளையங்கோட்டையில் பல்வேறு இடங்களிலும் அதிக அளவில் தண்ணீர் புகுந்துள்ளது. நெல்லையில் ஒரு வீடு வெள்ளத்தில் இடிந்தபடி அடித்துச் செல்லப்பட்டது. பல வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளன. இதேபோல் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல இடங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. மாநகராட்சி பகுதியில் 20 நிவாரண முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை மீட்ட ஹெலிகாப்டர்

மீட்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தவித்த 2 கர்ப்பிணிகள் உள்பட 17 பேரை விமானப்படை ஹெலிகாப்டர் 3 மணிநேரம் போராடி பாதுகாப்பாக மீட்டது. அந்த 17 பேரும் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் குழு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கவும் அரசு எந்திரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழுவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 5 அமைச்சர்கள் பணியாற்றி வரும் நிலையில் கூடுதலாக அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பேரிடர் மீட்புக்குழுவினர்

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆறு மற்ற அணைகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படைகள் ஏற்கனவே 3 மாவட்டங்களிலும் உள்ளது. இப்போது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 9 குழுக்களில் 225 பேரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 8 குழுக்களில் 200 பேரும் அங்கு மீட்பு பணியில் இருக்கிறார்கள்.

செல்போன் குறுஞ்செய்தி

இன்னும் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். வெள்ள காலங்களுக்கான பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் அந்த மாவட்டங்களில் உள்ள 62 லட்சம் பேருக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளோம். காலை 8 மணி வரை இதுவரை 7 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் 84 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக 84 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக படகுகள், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

விரைந்த முப்படைகள்

ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளையும் உதவிக்கு அழைத்து உள்ளோம். முப்படையும் மீட்பு பணிக்கு விரைந்துள்ளது. வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு ஏற்ப அங்கு உஷார்படுத்தினோம்.

ஆனால் இப்போது உள்ள சூழ்நிலை வரலாறு காணாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 732 உதவிகள் கோரப்பட்டதில் அனைத்தும் முடிக்கப்பட்டு, 144 உதவிகள் மட்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கவனித்து வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு உதவிகள் அளிப்பதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரிகள் விரைந்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் உணவு

கோவை மாவட்ட கலெக்டர் மூலம் உணவு பாக்கெட்டுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு சில பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பாக்கெட்டுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 50 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் சீரான மின்சார வினியோகம் செய்வதற்காக 3 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பேர் களப்பணியில் ஈடுபட்டு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இன்றும் மழை தொடருகிறது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது ஏற்கனவே தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை மேலும் கலக்கம் அடைய செய்துள்ளது.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments