வறட்சி மாவட்டம் அழைக்கப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர் ஆதாரம் வடகிழக்கு பருவ மழையும், வைகை தண்ணீரும்தான். இந்த இரண்டும் ஒரு சேர வந்தால்தான் மாவட்டத்தின் நீர் ஆதாரம் உயர்ந்து விவசாயம் நன்றாக இருக்கும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால் இவை இரண்டும் இந்த மாவட்ட மக்களை 4 ஆண்டுக்கு ஒரு முறையே வந்து மகிழ்விக்கிறது. சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகி மாவட்டத்திற்கு பயனின்றி கடலில் கலந்து வீணாகி வருகிறது. பெரும்பாலும் இந்த 2 நீராதாரங்களும் இல்லாமல் மாவட்டத்தில் வறட்சி தான் நிலவுகிறது.

இந்த மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பெய்து கெடுக்கும் அல்லது பெய்யாமல் கெடுக்கும் என்ற பழமொழி ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.

அதிகம் பெய்யும்

மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 827 மில்லி மீட்டர் ஆகும். இதில் மாவட்ட விவசாயத்திற்கு பயன்படும் வடகிழக்கு பருவமழையின் ஆண்டு சராசரி 501.60 மில்லி மீட்டராகும். இதில் பெரும்பாலும் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 565 மில்லிமீட்டர் மழை பெய்து வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 627.30 மில்லி மீட்டரும், 2016-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக 173.87 மில்லி மீட்டரும், 2017-ம் ஆண்டு 278.67 மில்லி மீட்டரும், 2018-ம் ஆண்டு 467.18 மில்லி மீட்டரும், 2019-ம் ஆண்டு அதிக அளவாக 763.28 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதே போல் கடந்த 2020-ம் ஆண்டு 583.45 மில்லி மீட்டரும், 2021-ம் ஆண்டு 648.77 மில்லி மீட்டரும், 2022-ம் ஆண்டு 365.04 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தாமதமாக தொடங்கிய நிலையில் 115 மில்லி மீட்டரும், கடந்த நவம்பர் மாதம் 354 மில்லி மீட்டரும் இந்த மாதம் இதுவரை 121.20 மில்லி மீட்டரும் என மொத்தம் 33 நாட்களில் 590 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவான 501.60 மில்லி மீட்டரை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக அதாவது 590 மில்லி மீட்டர் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வடகிழக்கு பருவமழை முடிய நாட்கள் உள்ளதால் மழை இன்னும் அதிகம் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

கடலாடி-15, வாலிநோக்கம்-16.2, கமுதி-43.2, பள்ள மோர்குளம்-15.9, முதுகுளத்தூர்-19.3, பரமக்குடி-21.2, ஆர்.எஸ்.மங்கலம்-16.6, மண்டபம்-27.2, ராமநாதபுரம்-14, பாம்பன்-1.9, ராமேசுவரம்-31.8, தங்கச்சிமடம்-21.2, தீர்த்தாண்டதானம்-23.2, திருவாடானை-12,தொண்டி-22.7, வட்டாணம்-19.4. மொத்தம்-320.8, சராசரி-20.5.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் 68 வீடுகள் பாதி அளவிலும், 8 வீடுகள் முழுமையாகவும் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இது தவிர 2 மாடுகளும் 2 ஆடுகளும் பலியாகி உள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments