புதுக்கோட்டையில் ரூ.4 கோடியில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை கட்டிட வரைபடம் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைப்பு




புதுக்கோட்டையில் ரூ.4 கோடியில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதுகுறித்த கட்டிட வரைபடம் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘ஆயுஷ்’ மருத்துவமனை

புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘ஆயுஷ்' மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ சிகிச்சைகள் ஒருங்கிணைந்த ஒரே இடத்தில் அளிக்கும் வகையில் அமைக்கப்படும் மருத்துவமனை தான் ‘ஆயுஷ்' மருத்துவமனை ஆகும்.

இந்த மருத்துவமனை புதிதாக கட்டுவதற்காக பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தரைதளம், முதல் தளம், 2-வது தளம், மேல் தளம் என அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக வரைபடம் பொதுப்பணித்துறைக்கு மருத்துவ துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

50 படுக்கைகள் வசதி

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ‘ஆயுஷ்' மருத்துவமனை ரூ.4 கோடியில் அமைய உள்ளது. மாவட்டத்தில் அரசு தரப்பில் ஏற்கனவே சித்த மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 33 இடங்களிலும், ஆயுர்வேதா சிகிச்சை மருத்துவமனை 6 இடங்களிலும், ஹோமியோபதி சிகிச்சை 3 இடங்களிலும், யோகா சிகிச்சை 5 இடங்களிலும் அளிக்கப்படுகிறது. இதில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டையில் மையப்பகுதியில் இந்த மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தான் ‘ஆயுஷ்' மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மருத்துவமனை கட்டிடம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கு வரைபடத்துடன் தெரிவித்துள்ளோம். உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை பெற தனி வசதி, 50 படுக்கைகள் வசதி, யோகா, இயன்முறை சிகிச்சை, சூரிய-மண் குளியலுக்கு தனி வசதி என அமைக்கப்படும். இந்த கட்டிட வரைபடம் ஒப்புதலான பின்பு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments