தூத்துக்குடியில் கன மழை எதிரொலி: வியாபாரிகள் வராததால் குறைந்த விலைக்கு மீன்கள் விற்பனை மீனவர்கள் கவலை
தூத்துக்குடியில் பெய்த கன மழையால் ஏலம் எடுக்க வியாபாரிகள் வராததால் குறைந்த விலைக்கு மீன்கள் விற்பனையானது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் கவலையடைந்தனர்.

கன மழை

வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் பலர் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 15-ந் தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

கரை திரும்பிய மீனவர்கள்

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இயல்புநிலை திரும்பியதால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்போல் மீன்பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன் சிக்கியது. இந்தநிலையில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலையடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

குறைந்த விலைக்கு விற்பனை

வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 8 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். வலையில் 150 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன், இறால், மீன்கள் உள்ளிட்டவை அதிகளவில் சிக்கியது. இந்தநிலையில் வியாபாரிகள் போதிய அளவில் வராததால் மீன்கள் குறைந்த விலைக்கே ஏலம் விடப்பட்டது. இதற்கு காரணம் இப்பகுதியில் பிடித்து வரப்படும் மீன்கள், இறால், நண்டு போன்றவற்றை தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகள் தான் வாங்கி செல்வார்கள்.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் அங்குள்ள வியாபாரிகள் யாரும் இங்கு ஏலம் எடுக்க வரவில்லை. இதனால் மீன்களும் விலை போகாமல் இருந்தது. தற்போது இங்கு வந்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு மீன்களை வாங்கிச் சென்றனர். இதனால் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments