டிசம்பா் 30 முதல் கோவை - பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்: கோவை வந்தடைந்த ரயில் பெட்டிகள்
கோவை - பெங்களூா் இடையே டிசம்பா் 30 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கோவை ரயில் நிலையத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- திருநெல்வேலி, சென்னை-மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில் நகரங்களான கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து தெற்கு ரயில்வே சாா்பில் கோவை-பெங்களூா் இடையே டிசம்பா் 30 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை, பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கிவைக்க உள்ளாா்.

இதற்கிடையே, சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, கோவை - பெங்களூா் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை கோவை ரயில் நிலையத்துக்கு வந்தன.

இதுகுறித்து கோவை ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: கோவைக்கு 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒரு சொகுசு பெட்டியில் 52 இருக்கைகளும், மற்ற 7 பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் உள்ளன.

செகுசுப் பெட்டியில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,850ம், மற்ற பெட்டிகளில் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிா்ணயம் செய்யப்படலாம். இந்தக் கட்டணத்தில் காலை உணவும் அடங்கும்.

கோவை ரயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12 மணிக்கு பெங்களூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும். கோவை-பெங்களூா் இடையே உள்ள 380 கிலோ மீட்டா் தொலைவை அடைய மற்ற ரயில்ககளில் 7 மணி நேரம் வரை ஆகும். ஆனால், வந்தே பாரத் ரயில் 5 மணி நேரத்தில் சென்றடையும் என்றாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments