ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

செங்கோட்டை வரை நீட்டிப்பு

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு இருமார்க்கங்களிலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 9.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து இந்த ரெயில் அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 3 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயிலை இரு மார்க்கங்களிலும் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று வைகோ மத்திய ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து, மதுரை கோட்ட ரெயில்வேயின் பரிந்துரைப்படி ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்து இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் கொடுத்துள்ளது. அதன்படி, இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு காலை 6.40 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து இந்த ரெயில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

நிறுத்தங்கள்

இந்த ரெயில் நெல்லை-செங்கோட்டை இடையே சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு தென்மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments