புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு தொடங்க கருத்துரு




புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு தொடங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இளங்கலை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல் பேட்ஜ் கடந்த 2022-ம் ஆண்டு முடித்து வெளியேறினர். இக்கல்லூரியில் முதுகலை படிப்பு அவசர சிகிச்சை பிரிவு பாடத்திற்கு மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மற்றப்பாடப்பிரிவுகளிலும் முதுகலை மருத்துவப்படிப்பு தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

முதுகலை படிப்பு

இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் பொது மருத்துவம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்த துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்குவதின் மூலம் அப்படிப்புக்கு கூடுதல் இருக்கைகள் கிடைக்கும். மேலும் அவர்கள் பயிற்சியாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் போது டாக்டர்கள் பற்றாக்குறை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு கூடுதலாக சிகிச்சை கிடைக்கும்.

முதுகலை பட்டப்படிப்பு துறைவாரியாக இடங்கள் ஒதுக்கப்படும் போது எண்ணிக்கை வேறுபடும். தேசிய மருத்துவக்கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்த பின்பு தான் இப்பாடப்பிரிவுகளை தொடங்க முடியும். இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினரும் ஆய்வு செய்து அனுமதிக்கான உத்தரவை வழங்கும். தற்போதைக்கு முதுகலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கான நடவடிக்கை கருத்துரு வடிவில் மட்டும் உள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments