விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் (NH-45A) தற்போது நிலை என்ன ? RTI கேள்விக்கு நெடுஞ்சாலை துறை பதில்




நாகப்பட்டினத்தில் இருந்து சட்டநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தாமதப்படுத்தாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், 500 ஆண்டுகளை கடந்த நாகூர் ஆண்டவர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோயில், சூரசம்ஹாரத்தின் போது சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்யும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தரும் இடமாக நாகப்பட்டினம் மாவட்டம் அமைந்துள்ளது.அந்த அளவிற்கு புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை வசதி மிகவும் குறைவாக உள்ளதால் நாகப்பட்டினத்தை நோக்கி வருவோர்கள் மனஉளைச்சல் அடைந்து செல்கின்றனர்.

இதனால் நாகப்பட்டினம் விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட நாகப்பட்டினத்தில் இருந்து விழுப்புரம் வரையிலான 180 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டது. ஒரே கட்டமாக பணிகள் செய்தால் பணிகள் முடிப்பதில் காலதாமதம் ஏற்படும் என இந்த சாலை பணி நான்கு கட்டமாக பிரிக்கப்பட்டு சாலை பணிகள் தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக விழுப்புரம் தொடங்கி புதுச்சேரி வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கும். இரண்டாம் கட்டமாக புதுச்சேரி தொடங்கி பூண்டியான்குப்பம் வரை 38 கிலோ மீட்டர் தூரம், மூன்றாம் கட்டமாக பூண்டியான் குப்பம் தொடங்கி சட்டநாதபுரம் வரை 56.8 கிலோ மீட்டர் தூரம், நான்காம் கட்டமாக சட்டநாதபுரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை 55.75 கிலோ மீட்டர் தூரம் என பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 3 கட்ட பணிகள் விரைவாக நடந்து வரும் நேரத்தில் நான்காம் கட்ட பணியான நாகப்பட்டினத்தில் இருந்து சட்டநாதபுரம் வரையிலான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. 55.75 கிலோ மீட்டர் தூர பணிகளில் இதுவரை 32 கிலோ மீட்டர் தூர பணிகளே நடந்துள்ளது மிகவும் வேதனையாக இருக்கிறது.

நான்கு வழிச்சாலை அமைக்க சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கவும், புதிதாக சாலைகள் அமைக்கவும் இருப்பதால் பல்வேறு இடங்களில் பழைய சாலைகளை சேதப்படுத்தியுள்ளனர்.இதனால் நாகப்பட்டினம் நோக்கி சாலை மார்க்கமாக வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசு இந்த சாலைபணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாகப்பட்டினம் பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமர் புரொடக்சன் பேசஞ்சர் அசோசியேசன் செயலாளர் அரவிந்த்குமார் கூறியதாவது:விழுப்புரம் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான 180 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்கு வழிசாலை பணி கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் தொடங்கி சட்டநாதபுரம் வரை செல்லும் சாலை பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது வரை நாகப்பட்டினம்-சட்டநாதபுரம் இடையிலான நான்கு வழி சாலை பணிகள் 32 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நிறைவடைந்து உள்ளது.

இந்த பணிகள் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கின்றனர். சட்டநாதபுரம் தொடங்கி பூண்டியாங்குப்பம் இடையிலான நான்கு வழி சாலை பணிகள் 84.21 சதவீதம் நிறைவடைந்துள்ளது இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கின்றனர். பூண்டியாங்குப்பம் தொடங்கி- புதுச்சேரி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் 68.55 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் தொடங்கி- விழுப்புரம் இடையிலான நான்கு வழிசாலை பணிகள் 92.13 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.ஆனால் நாகப்பட்டினம் தொடங்கி சட்டநாதபுரம் இடையிலான பணிகள் மிகவும் காலதாமதமாகவே நடந்து வருகிறது. நான்கு கட்டமாக பணிகள் பிரித்து நடந்து வரும் சாலைப்பணிகளில் நாகப்பட்டினம் நோக்கி வரும் சாலை பணி முடிவதற்கு அடுத்த ஆண்டை இலக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்து இருப்பது வளர்ந்துள்ள அறிவியல் உலகத்தில் வியப்பாக உள்ளது.

மற்ற இடங்களில் அதி நவீன இயந்திரங்களை கொண்டு சாலை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் நாகப்பட்டினம் நோக்கி செல்லும் சாலை பணிகளில் அது போல் நவீன இயந்திரங்கள் இன்றி பணிகள் மிகவும் காலதாமதமாகவே நடந்து வருகிறது.சாலைபணிகள் இடையே பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்க வேண்டும். எனவே ஒன்றிய அரசு நாகப்பட்டினம் தொடங்கி சட்டநாதபுரம் வரையிலான நான்கு வழிசாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு முடித்தால் தான் நாகப்பட்டினம் தொடங்கி விழுப்புரம் வரையிலான நான்கு வழி சாலைப்பணியின் நோக்கம் நிறைவு பெறும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments