நவீன வசதிகளுடன் ரூ.394 கோடியில் கட்டப்பட்டது சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்காக வண்டலூர் கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம்

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகை, வாகனப்பெருக்கம் காரணமாக வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இதனையடுத்து சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்காக புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

திறப்பு விழா

பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) சார்பில் ரூ.393.74 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பஸ் நிலையங்களுள் ஒன்றான இந்த பஸ் நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், பஸ் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதற்கிடையே இந்த பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30-ந் தேதி (அதாவது நேற்று) திறந்து வைத்தார்.

இதன்படி நேற்று புதிய பஸ்நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க கிளாம்பாக்கம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பஸ் நிலைய பிரதான நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பஸ் நிலைய பிரதான கட்டிடத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துவிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விழா பகுதிக்கு பேட்டரி கார் மூலம் அவர் சென்றார்.

பஸ் சேவை தொடக்கம்

அதைத்தொடர்ந்து விரைவு பஸ் உள்ளிட்ட அரசு பஸ்கள் சேவையை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பஸ்சில் சென்ற பயணிகள் கையசைத்து முதல்-அமைச்சருக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். பதிலுக்கு முதல்-அமைச்சரும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் அங்கு ஆவின் நிலையம் அமைத்துள்ள மாற்றுத்திறனாளி பயனாளிக்கு அதற்கான ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பஸ் நிலைய பிரதான கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் அவருக்கு இந்த பஸ் நிலையத்தை பற்றிய செயல் விளக்க குறும்படம் காட்டப்பட்டது.


முன்னதாக விழாவில் அமைச்சர் சேகர்பாபு வரவேற்று பேசியதாவது:-

கூடுதல் பணிகள்

கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு 2018-ம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. 13.3.2019 அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்களின் ஆட்சி காலத்தில் 30 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு இருந்தன. மீதம் இருந்த 70 சதவீத பணிகளை 28 மாதங்களில் செய்து முடித்த சாதனையாளர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். திட்டமிடப்பட்ட பணிகள் மட்டுமல்லாமல், முன்பு திட்டமிடாத, ஆனால் தேவையான பல்வேறு பணிகளுக்கு கூடுதலாக ரூ.90 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் தண்ணீர் தேங்காதபடி மழை நீர் கால்வாய்; தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதற்கான மாற்றுப்பாதை; 8 கி.மீ. நீளச்சாலை; பயணிகளுக்காக 6 ஏக்கர் பரப்பளவில் அழகிய பூங்கா; காலநிலைப் பூங்கா; முழுமையாக பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது அங்கு வரக்கூடிய ஒரு லட்சம் பயணிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் நிலையம் என 50 ஆண்டுகளுக்கு தேவையான வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சிவசங்கர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, டி.ஆர்.பாலு எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments