தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை பணி ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்
தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை பணி ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்தார்.

4 வழிச்சாலை அமைக்கும் பணி

விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை 165 கி.மீ. மாநில சாலையை 2006-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (நகாய்) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2010-ம் ஆண்டு 4 வழிச்சாலைக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2017-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 517 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்த சாலைப்பணிகள் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை ரூ.711 கோடி மதிப்பீட்டிலும், சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரை ரூ.1,461 கோடி மதிப்பீட்டிலும், சோழபுரம் முதல் தஞ்சை வரை ரூ.1,345 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 3 பிரிவுகளாக நடக்கிறது.

102 பாலங்கள்

இச்சாலையில் குறுக்கே செல்லும் ஆறுகளில் 102 பாலங்களும், 70 இடங்களில் சிறுபாலங்களும், 5 இடங்களில் ெரயில்வே பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும் அமைக்கப்படுகிறது. கும்பகோணம் மாநகராட்சியை ஒட்டிய பைபாஸ் சாலையுடன் 4 வழிச்சாலை அமைக்கப்படுவதால் கும்பகோணம்-சென்னை பைபாஸ் சாலையில் மேம்பாலமும், தாராசுரம் தஞ்சை சாலையில் மேம்பாலமும், தாராசுரம் பகுதியில் ெரயில்வே பாலமும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி முதல் தஞ்சை நான்கு வழி சாலைப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தன்னார்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம் செய்தும் பணிகள் மெதுவாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொேரானா ஊரடங்கு

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (தஞ்சாவூர்) பிரிவு பொறியாளர் கூறியதாவது:- விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் 4 வழிச்சாலைப்பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இச்சாலையில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை 47.53 சதவீத பணிகளும், சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரை 80.10 சதவீத பணிகளும், சோழபுரம் முதல் தஞ்சாவூர் வரை 77.10 சதவீத பணிகளும் முடிவடைந்துள்ளன.

2020-ம் ஆண்டில் முடிய வேண்டிய பணிகள், நிலம் கையகப்படுத்துதல், வீராணம் குடிநீர் குழாய்கள் மாற்றுதல், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அனுமதிகள் பெறுதல், கஜா, புரவி புயல்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும்

தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின்பேரில், அணுகு சாலைகள் அமைத்தல், பாலங்கள், மேம்பால கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற ஜூன் மாதத்துக்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments