பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கம்’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டும் (2024) பொங்கல் பரிசாகத் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அகியவை இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments