மழை வெள்ளத்தால் ரயில்வே பாதை சேதமடைந்து அதை சீரமைக்கப்பட்ட ரயில் பாதை... 20 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி - காயல்பட்டினம் - திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் இன்று ஜனவரி 07 முதல் அனைத்து ரயில்கள் செல்ல அனுமதி தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை-திருச்செந்தூர் இடையே தண்டவாளம் சீரமைக்கப்பட்டதால், திருச்செந்தூரில் இருந்து 20 நாட்களுக்கு பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடத்தொடங்கியது. இந்த மார்க்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகிறது.

தண்டவாளம் சேதம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உடைந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே தாதன்குளம் அருகில் தண்டவாளம் அரித்து செல்லப்பட்டது.

கடந்த 17-ந்தேதி இரவில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டதால், அதில் இருந்த 800-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். பெருவெள்ளத்தில் ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையிலான தண்டவாளமும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்தது.

பின்னர் நெல்லையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது.

சீரமைப்பு பணிகள் நிறைவு

தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. மின்வழித்தட பணிகளும் நிறைவு பெற்றதால் நேற்று முன்தினம் மின்சார என்ஜினை இயக்கியும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்தும் நெல்லைக்கு மின்சார என்ஜினை அதிவேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட என்ஜின், 61 கிலோ மீட்டர் பயண தூரத்தை 1 மணி 10 நிமிடங்களில் கடந்தது. தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர் இடையே ரெயில்களை இயக்குவதற்கு தலைமை பொறியாளர் அனுமதி அளித்தார்.

நேற்று மாலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பெட்டிகளை மின்சார என்ஜின் மூலம் திருச்செந்தூருக்கு கொண்டு சென்றனர். திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. 20 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ஓடத் தொடங்கியதால், அதில் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பயணித்தனர்.

ரெயில்கள் கால அட்டவணை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்செந்தூர்-நெல்லை இடையே அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகிறது. எனினும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 7.20 மணிக்கு புறப்படும் ரெயில் இன்று மட்டும் இயக்கப்படாது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments