பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசு இன்று முதல் டோக்கன் வினியோகம்




பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசு இன்று முதல் டோக்கன் வினியோகம் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வீடு வீடாக வினியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழர் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு (ஒன்று) ஆகியவை 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்று கடந்த 2-ந் தேதி தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பில், பொங்கல் பண்டிகைக்கான ரொக்கப்பரிசு மட்டும் விடுபட்டு இருந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இலவச வேட்டி-சேலை

அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி - சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் என்ற தகவலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 ரொக்கப் பரிசு மற்றும் இலவச வேட்டி - சேலை ஆகியவற்றை மக்களுக்கு வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்போது ‘டோக்கன்' மூலம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டோக்கன் வினியோகம்

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி, தகுதியான ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். விடுபட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு வருகிற 14-ந் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேதி, நேரம்...

இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திடும் வகையில், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் அந்தந்த ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.

இப்பணிகளின் போது ரேஷன் கடை பணியாளர்களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி - சேலைகளும் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

© 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments