இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்; 29 பேர் காயம் 13 காளைகளை பிடித்த தஞ்சை மாவட்ட வீரருக்கு முதல் பரிசு




இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நேற்று நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 29 பேர் காயமடைந்தனர். 13 காளைகளை பிடித்த தஞ்சை மாவட்ட வீரருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டில் (2024) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இங்குள்ள விண்ணேற்பு ஆலய ஆண்டுவிழா, புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் வரிசையாக வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை களத்தில் நின்ற மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். சில காளைகள் காளையர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து சென்றன. மேலும் தன்னை பிடிக்க வந்த வீரர்களை தூக்கி பந்தாடியது. சில காளைகள் களத்தில் நின்று சுற்றி சுற்றி வந்தன. இதனை கண்ட மாடுபிடி வீரர்கள் அந்த காளைகளை பிடிக்காமல் அப்படியே இரும்பு தடுப்புகள் மீது ஏறிக்கொண்டனர்.


29 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களில் சில மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்காின் காளைகளும் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை போட்டிபோட்டு அடக்கியதில் மாடுபிடி வீரர்கள் 29 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் பரிசு

ஜல்லிக்கட்டில் 13 காளைகளை பிடித்த தஞ்சாவூர் மாவட்டம் ராயமுடையான்பட்டியை சேர்ந்த சுகேந்திற்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 8 காளைகளை பிடித்து 2-ம் இடம் பிடித்த பள்ளப்பட்டியை சேர்ந்த ராமுவுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.

இதேபோல மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளில் முதல் இடம் பிடித்த காளையின் உரிமையாளரான புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு மோட்டார் சைக்கிளும், 2-ம் இடம் பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளைக்கு சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டன.

மோட்டார் சைக்கிள் பரிசுகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தங்களது ஏற்பாட்டில் வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments