மன்னார்வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதியில் கடல் நீர்மட்டத்தில் மாற்றமா? ஆராய்ச்சி வல்லுனர்கள் குழு ஆய்வு




மன்னார்வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதியில் கடல்நீர்மட்டத்தில் ஏதேனும் மாற்றமா? என்பதை அறிய தேசிய கடல் சார்ந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தியுள்ளது.

கடல்மட்டம் மாற்றம்

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு தமிழக கடல் பகுதிகளில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, கீழக்கரை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்குதலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் தேசிய கடல் சார்ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் கடல் நீர்மட்டம் குறித்து கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஆய்வு நடைபெற்று வருகின்றது. இதனிடையே மத்திய அரசின் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் கடல் நீர் மட்டம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி வேதாளை முதல் மரைக்காயர்ப்பட்டினம், மண்டபம், பாம்பன் இடைப்பட்ட கடல் பகுதிகளில் தேசிய கடல் சார் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் கடல் நீர் மட்டம் உயரம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு....

இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:-

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடல் நீர்மட்டம் குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும். அதுபோல் தற்போது கேரளா முதல் தமிழகம் வரையிலான கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் இது குறித்து ஆராய்ச்சி முடிவடைந்துவிட்டது. கரையிலிருந்து கடலுக்குள் நான்கு இடங்களில் சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட பெரிய அளவுகோல் மூலம் கடலுக்குள் இறங்கி 4 இடங்களில் கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து ஜி.பி.எஸ். கருவியில் பதிவு செய்யப்படும்.

இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் கடல்நீர்மட்டம் தற்போது எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பது குறித்து கண்டறிவதற்காகவே நடத்தப்பட்டு வருகின்றது. பாம்பன், மண்டபம் பகுதிகளில் ஆய்வு முடிந்த பின்னர் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதுமே இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments