கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் பரிசீலனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:-

உபதேசியர்கள் நல வாரியம்

சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில்கொண்டு திட்டங்களை தி.மு.க. அரசு உறுதியோடு செயல்படுத்தி வருகிறது. தற்போது நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசு சார்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறேன்.

அதன்படி, உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கான ‘வெப் போர்ட்டெல்' இந்த மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

உயர்மட்ட குழு

கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி அல்லது நகராட்சி சார்பில் கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோவில், மசூதி, தேவாலயம், குர்த்வாரா போன்றவற்றின் மூலம் பொது நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறைப்படுத்துதல், மறு இருப்பிடம் செய்தல் தொடர்பாக விரிவான கொள்கை அரசால் உருவாக்கப்பட்டு, ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டுத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதிலும் பல இடர்பாடுகளைக் களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும். இதற்காக உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியத் தொகையை எந்தவித தங்குதடையுமின்றி, விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக, உரிய இணைய வழி முகப்பு உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்து தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் குறுகிய காலத்திற்குள் உரிமம் வழங்கப்படும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் சிற்றுண்டி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் வழங்கப்படும் அரிசி போன்றவை இல்லங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெறுவது தொடர்பாக மாநில அளவில் உள்ள துறைகளின் மூலம் இதற்கான வினியோக அனுமதி மற்றும் குறைத்தீர்வு வழிமுறைகள் வழங்கப்படாமல், மாவட்ட கலெக்டர்கள் மூலமே இதற்கான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், வானவில் மன்றம், தேன்சிட்டு மலர், கலைத்திருவிழா போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.

கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், முதல்-அமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

நிரந்தர சான்றிதழ்

பள்ளிக்கல்வித்துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் 3 மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

சமூகநலத் துறை, ஆதி திராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களைப் புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்படும். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பில் இடம்பெறாத உங்கள் கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments