பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரெயில்

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் திருநாளை அனைவரும் தங்களின் சொந்த ஊர்களில் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையிலிருந்து மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வார்கள். அதுமட்டும் அல்லாமல் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பாகவே பஸ் மற்றும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிகபட்சமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டிய தேதிகளில் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பாகவே நிரம்பிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களின் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுவிட்டது. இதனால் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிட்டு உள்ளது.

எனவே, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மேலும் 2 சிறப்பு ரெயில்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்- தூத்துக்குடி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம்- தூத்துக்குடி

வரும் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி நோக்கி செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) அதேநாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06002) அதேநாள் இரவு 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல, வரும் 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரெயில் (06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரெயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பலர் ஏமாற்றம்

இந்தநிலையில், தாம்பரம் நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. எனவே, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது. மேலும், இந்த தேதிகளுக்கான ஏ.சி. டிக்கெட்டுகள் மட்டும் சற்று நேரம் நீடித்த நிலையில் ஒரு மணி நேரத்தில் அந்த டிக்கெட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்தது. இதனால் சிறப்பு ரெயில்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments