இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலம் மும்பை - நவி மும்பை இடையே (22 கி.மீ நீளம்) ரூ.17,843 கோடியில் உருவான ‘அடல் சேது’ கடல்வழி பாலம் திறப்பு: நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி




இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (எம்டிஎச்எல்) பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தீவு நகரான சேவரியில் இருந்து ராய்காட் மாவட்டம், உரான் தாலுகாவில் உள்ள நவா சேவா வரை 21.8 கி.மீ. நீளத்துக்கு மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (எம்டிஎச்எல்) எனப்படும் 'அடல் சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை நினைவுகூரும் வகையில் இப்பாலத்துக்கு 'அடல் சேது' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பைஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.17,840 கோடி ரூபாய் செலவில் 'அடல் சேது' பாலம் கட்டப்பட்டுள்ளது. இது ஆறு வழிப்பாதை கொண்ட பாலமாகும். கடல் மீது சுமார் 16.5 கி.மீ. நீளமும், தரையில் சுமார் 5.5 கி.மீ. நீளமும் கொண்டது. இந்த பாலமானது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு விரைவான இணைப்பை வழங்கும்.

மேலும், மும்பை மற்றும் அருகில் உள்ள பிற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடல் சேது கடல் பாலம் காரணமாக மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரம் வெறும் 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது 2 மணி நேரமாக இருந்தது. மேலும் மும்பையிலிருந்து புணே, கோவா மற்றும் தென்னிந்தியா செல்வோரின் பயண நேரத்தையும் குறைக்கும்.

'அடல் சேது' பாலம் மும்பை துறைமுகத்துக்கும், ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விழா தவிர, மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.30,500 கோடிக்கும் அதிகமான மேலும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக, நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments