மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க தலையில் கரும்பு கட்டு சுமந்தபடி 17 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்ற விவசாயி புதுக்கோட்டை அருகே ருசிகரம்




மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க தலையில் கரும்பு கட்டு சுமந்தபடி விவசாயி ஒருவர் சைக்கிளில் 17 கி.மீ. தூரம் சென்ற ருசிகர சம்பவம் புதுக்கோட்டை அருகே நடந்துள்ளது.

பொங்கல்

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும், கலாசாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவரது பெற்றோர்கள் தங்களது வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் வாடிக்கையாக உள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும், 80 வயதுடைய முதியவர் ஒருவர் தனது மகளுக்கு தற்போதும் சைக்கிளில் ெசன்று சீர் கொடுத்து வருகிறார். அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சைக்கிளில் சென்ற சீர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 80). விவசாயி. இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். சுந்தராம்பாளுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தை பிறந்தது. அன்று முதல் இன்று வரை செல்லத்துரை தனது மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் 80 வயதிலும், அவரது சைக்கிளில் தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி, துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் பொருட்களை வைத்துக்கொண்டும், 5 கரும்புகள் அடங்கிய கட்டை தலையில் சுமந்தபடியும் சைக்கிளில் சென்றார். வம்பன் 4 ரோடு பகுதியில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு சென்றதை சாலை நெடுகிலும் உள்ள பொதுமக்கள் பார்த்து வியந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தும் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments