புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற பெற்றோர் கைது பரபரப்பு வாக்குமூலம்
புதுக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

விவாகரத்து வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 34), விவசாயி. இவருக்கும், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மோகன்ராஜ் அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் கிராமத்தை சேர்ந்த செண்பகவல்லி என்கிற கிருத்திகாவுடன் (24) கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு 8 மாதத்தில் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை சாவு

கடந்த 12-ந் தேதி மாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. பின்னர் மோகன்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது, வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மோகன்ராஜ் மற்றும் கிருத்திகா ஆகியோரை நேற்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் மோகன்ராஜ் மற்றும் கிருத்திகா ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கழுத்தை நெரித்துக் கொலை

கடந்த 12-ந் தேதி மோகன்ராஜ்- கிருத்திகா இருவரும் வீட்டில் தனியாக பேசி கொண்டு இருந்தனர். அப்போது மோகன்ராஜ் நமக்கு குழந்தை பிறந்துள்ளது கோர்ட்டிற்கு தெரியவந்தால் முதல் மனைவி இருக்கும்போது, எப்படி 2-வது திருமணம் செய்தாய் என்று எனக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என புலம்பி உள்ளார். மேலும், குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது, எடை மிகவும் குறைவாக உள்ளது. எனவே குழந்தை இப்போது தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையின் கழுத்தை மோகன்ராஜ் சால்வை துணியால் நெரித்து உள்ளார். இதில் குழந்தை எந்த ஆசைவும் இன்றி கிடந்தது. இதையடுத்து மோகன்ராஜ் குழந்தை இறந்து விட்டது, உடலை எடுத்து கொண்டு எங்காவது போட்டு விடு என்று கிருத்திகாவிடம் கூறி விட்டு பதற்றத்துடன் வெளியே சென்று உள்ளார்.

தண்ணீர் தொட்டியில்...

இதையடுத்து கிருத்திகா என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை கொண்டு போய் போட்டுள்ளார். பின்னர் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர். குழந்தையை யாரோ எடுத்து சென்று தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டார்கள் என்று கூறிவிடலாம் என முடிவு செய்து குழந்தையை எடுத்துக்கொண்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மோகன்ராஜ் மற்றும் கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவருக்கும் திருமயம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர், பொன்னமராவதி கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து மோகன்ராஜ் புதுக்கோட்டை சிறையிலும், கிருத்திகா திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். பெற்ற குழந்தையை பெற்றோர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments