பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு




பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிராம நிர்வாக பெண் அதிகாரி கைது

தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார். அப்போது கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த சங்கீதா(வயது 43) என்பவர் தனிப்பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சந்திரபாபுவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சந்திரபாபு இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுக்களை சந்திரபாபுவிடம் கொடுத்து அதை சங்கீதாவிடம் வழங்குமாறு தெரிவித்தனர். அதன்படி சங்கீதாவிடம் ரூ.3 ஆயிரத்தை சந்திரபாபு கொடுத்தார். அதை சங்கீதா வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும், களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் சிறை

பின்னர் அவரை கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சண்முகப்பிரியா விசாரணை செய்து சங்கீதாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முகமது இஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments