மழைப்பொழிவு குறைவு: புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்




புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

வறட்சி மாவட்டமாக...

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி:- நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளதால் விவசாயம் பொய்த்துவிட்டது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிட்டங்கிகளில் உள்ள இரும்பு, தளவாட பொருட்களை எடுத்து விட்டு அறுவடை காலத்தில் நெல் பாதுகாக்கும் கிடங்குகளாக மாற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தை போன்று நமது மாவட்டத்திலும் மழையளவு, சாகுபடி விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள புள்ளியியல் துறை மூலம் அறிக்கை புத்தகமாக வெளியிட வேண்டும். விவசாய நிலங்களில் குரங்கு, மயில், முயல், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விளைந்த நெல், நிலக்கடலை, சிறு தானியங்கள், தென்னை மாமரங்கள், வாழைகளை சேதப்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு

மிசா மாரிமுத்து:- கவிநாடு கண்மாய் வரத்து வாரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு தொடர்பாக வரைபடத்தை தயார் செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

செல்லதுரை:- மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்து விட்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோடியக்கரை கடற்கரையில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சண்முகம்:- அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்க வேண்டும்.

நோய் தாக்குதல்

கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் கொக்குமடை ரமேஷ்:- மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சம்பா நெல் சாகுபடி இந்த பருவத்தில் முழுமையாக செய்ய முடியவில்லை. தண்ணீர் இல்லாததால் விவசாய பயிர்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளானது. இதனை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். கல்லணை கால்வாய் பாசன பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை இந்த மாத இறுதிக்குள் திறக்க வேண்டும். நெல் அறுவடை எந்திரம் கூடுதலாக பெற்று அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணை கால்வாய் பாசன பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவுன்ராஜ்:- சொட்டு நீர்பாசனத்திற்கு உரம் மானியத்தில் வழங்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

இதேபோல் விவசாயிகள் பலர் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்ததால் விவசாயம் பாதிப்படைந்ததாகவும், புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலான இடங்களில் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து, கலெக்டர் மெர்சி ரம்யா கூறுகையில், மாவட்டத்தில் 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments