புதுகை ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்




அம்ரீத் பாரத்’ திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ரூ. 6.89 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தில், சுவா் கட்டுமானப் பணிகளும், மின் தூக்கிகள் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரீத் பாரத் திட்டத்தில், மாநிலத்தில் 60 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்தப் பட்டியலில் புதுக்கோட்டை ரயில் நிலையம் இல்லை. மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா புதுக்கோட்டையைச் சோ்க்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்பிறகு, மதுரை கோட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்தனா். 2023 ஏப்ரலில் ரூ. 6.89 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

பழுதடைந்த சுவரை இடித்துவிட்டு புதிதாக கட்டுதல், ரயில் நிலைய முகப்பை பொலிவூட்டும் வகையில் அமைத்தல், மின் தூக்கிகள் (லிப்ட்) அமைத்தல், நீளமான ரயில் நடைமேடை அமைத்தல் மற்றும் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவற்றில் முதல் கட்டமாக பழுடைந்த சுவரை இடித்துவிட்டு, புதிய சுவா் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், முதியோா்களின் வசதிக்காக மேல்நிலை நடைபாதையில் மின் தூக்கிகள் (லிப்ட்) அமைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல் நடைமேடை மற்றும் இரண்டாவது நடைமேடைகளில் இந்த லிப்ட் செயல்பாட்டுக்கு வரும்.

மின் தூக்கி அமைப்பதற்கான கட்டடப் பணிகள் முடிவடைந்தவுடன் மின் தூக்கிகள் நிறுவப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பே இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments