புதுக்கோட்டை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி நிறைவு: கடந்த ஆண்டை விட 3,196 பறவைகள் அதிகரிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது. கடந்த ஆண்டை விட 3,196 பறவைகள் அதிகமாக உள்ளது என தெரியவந்தது.

பறவைகள் கணக்கெடுப்பு

வனத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஈரநிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வனச்சரகங்களில் உள்ள 25 ஈர நிலப்பகுதிகளான குளம், ஏரிகள், கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு வனத்துறை, மன்னர் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் மற்றும் மன்னர் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கடந்த 2 நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.

25 குழுக்கள்

இக்கணக்கெடுப்பில் புதுக்கோட்டை வனச்சரகத்தில் கவிநாடு கண்மாய், ஆரியூர் கண்மாய், அன்னவாசல் பெரியகுளம், சிறுங்காகுளம், அறுவாகுளம், அறந்தாங்கி வனச்சரகத்தில் கரகத்திக்கோட்டை ஏரி, கீரனூர் கண்மாய், வெள்ளுர் எரி, முத்துகுடா கடலோர பகுதி, கட்டுமாவடி கடலோர பகுதி, பொன்னமராவதி வனச்சரகத்தில் கொன்னையூர் கண்மாய், ஏனாதி கண்மாய், காரையூர் கண்மாய், ஒலியமங்களம் கண்மாய், கருகபிள்ளம்பட்டி கண்மாய், கீரனூர் வனச்சரகத்தில் நீர் பழனி ஏரி, ஓவியர்பட்டி ஏரி, பெரம்பூர் எரி, குளத்தூர் ஏரி, கீரனூர் ஏரி, திருமயம் வனச்சரகத்தில் பெல் ஏரி, தாமரை கண்மாய், வேங்கை கண்மாய், வள்ளிகுளத்தான் கண்மாய், ஊனையூர் கண்மாய் ஆகிய 25 ஈர நிலப்பகுதிகளில் சுமார் 120 நபர்களை கொண்டு 25 குழுக்கள் அமைக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

3,196 கூடுதல் பறவைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட 25 ஈர நிலப்பகுதிகளில் 82 வகையான பறவை இனங்கள் மொத்தம் 11 ஆயிரத்து 980 எண்ணிக்கையிலான பறவைகள் காணப்பட்டதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக அறந்தாங்கி வனச்சரக பகுதிகளில் 6 ஆயிரத்து 527 எண்ணிக்கையிலான பறவைகளும், அடுத்தப்படியாக புதுக்கோட்டை வனச்சரகத்தில் 3 ஆயிரத்து 160 எண்ணிக்கையிலான பறவைகளும் கணக்கீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 3 ஆயிரத்து 196 எண்ணிக்கையிலான பறவைகள் கூடுதலாக உள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments