மணமேல்குடி ஆவுடையார்கோவில் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 தாலுகாவில் புதிய கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திறந்து வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 தாலுகாவில் புதிய கோர்ட்டுகளை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா திறந்து வைத்தார்.

புதிய கோர்ட்டுகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் திறப்பு விழா மற்றும் உள் கட்டமைப்புகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் திறப்பு விழா, புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ரூ.15 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பித்தல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா கலந்து கொண்டு புதிய கோர்ட்டுகளையும், கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தையும் திறந்து வைத்தார். மேலும் புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடங்களை புதுப்பித்தல் பணிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

சமரச மையங்கள்

விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா பேசுகையில், "தமிழக அரசு தனது பட்ஜெட்டில் நீதித்துறைக்கு 1 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கினால் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு திகழும். வக்கீல்கள் சமரச மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வழக்குகளை சமரச மையம் மூலம் தீர்வு காண வக்கீல்கள் முயல வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் முன்சிப் கோர்ட்டுகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வழக்குகளும் காகித பயன்பாடு இல்லாமல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரியமான கோர்ட்டு கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.

ஆலங்குடியில் சார்பு நீதிமன்றம்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் தான் 12 தாலுகாவிலும் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்றார். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ஆலங்குடியில் சார்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், "140 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு இந்த பணியை முடிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி நிதி போக கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அரசிடம் கோரிக்கை வைத்து பெறப்படும்'' என்றார்.

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு, விஜயகுமார், பவானி சுப்பராயன், கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் வரவேற்று பேசினார். விழாவில் நீதிபதிகள், வக்கீல் சங்க நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த, இளம் வக்கீல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments