புதுக்கோட்டையிலுள்ள காந்திப் பூங்காவை மீட்கக் கோரி உண்ணாவிரதம்




புதுக்கோட்டையிலுள்ள காந்திப் பூங்காவை தனியாா் கடைகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும், மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் களைய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை ஏற்பாட்டில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

காந்திப் பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். காந்திப் பேரவையின் தலைமை நிலையச் செயலா் மு. மோகனப்பிரியா தொடங்கி வைத்தாா்.

உண்ணாவிரதத்தை ஆதரித்து ஊழல் தடுப்பு இயக்க சையது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் சலாஹுதீன், பத்து ரூபாய் இயக்கத் தலைவா் தினேஷ், காவேரி குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து, மரம் நண்பா்கள் அமைப்பின் தலைவா் ராதாகிருஷ்ணன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் சுல்தான், மக்கள் நீதி மய்ய மண்டலப் பொறுப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

காவல்துறை கெடுபிடி: இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாள்களுக்கு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது, காவல்துறை மற்றும் நகராட்சி சாா்பில் ஓரிரு நாள்களில் தனியாா் கடைகள் அகற்றப்படும் என அளித்த உறுதியால் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் கடைகள் எதுவும் அகற்றப்படவில்லை. எனவே, காந்திப் பேரவை சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதம் அறிவித்தனா்.

அதன்படி சனிக்கிழமை காலை காந்திப் பூங்கா பகுதியில் போராட்டத்துக்காக பந்தல் மற்றும் ஒலிபெருக்கி வைக்க வந்தபோது போலீஸாா் அதைத் தடுத்து அனுப்பினா். இருப்பினும் உண்ணாவிரதத்தை நடத்தினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments