புதுக்கோட்டையில் 3 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை 928 பேர் எழுதினர்




புதுக்கோட்டையில் 3 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை 928 பேர் எழுதினர்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் 3 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 954 பேருக்கு நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டிருந்தது.

தேர்வுக்காக பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டையில் இத்தோ்வை 928 பேர் எழுதினர். 26 பேர் தேர்வு எழுதவில்லை.

கண்காணிப்பு கேமராக்கள்

தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதன் முறையாக ஒவ்வொரு தேர்வறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா, ஆசிரியர் தேர்வு வாரிய கண்காணிப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தேர்வர்களில் பெண்கள் சிலர் கைக்குழந்தைகளை தங்களது பெற்றோர், கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையங்களுக்குள் சென்றனர். அவர்கள் தேர்வு எழுதிவிட்டு வரும் வரை அந்த குழந்தைகளை அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் வைத்து கவனித்து வந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments