வணிக மின்இணைப்பை மாற்ற தொழிலாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி




வணிக மின்இணைப்பை மாற்ற தொழிலாளியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மின் இணைப்பு

கரூர் பசுபதிபாளையம் ஏ.வி.பி.நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 49). இவர் ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் முதல்நிலை போர்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரூர் அருகே உள்ள ஆச்சிமங்கலம், கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் மூலம் வீடு கட்டி வந்தார். வீடு கட்டும்போது கட்டுமான பணிக்காக வணிக மின் இணைப்பு பெற்றுள்ளார். தற்போது வீடு கட்டி முடித்தவுடன் வணிக மின்இணைப்பை, வீட்டு மின்இணைப்பாக மாற்ற ராயனூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வணிக மின் இணைப்பை, வீட்டு மின் இணைப்பாக மாற்ற போர்மேன் முருகானந்தம் ரூ.1,500 கேட்டுள்ளார். பின்னர் ரூ.1,000 மட்டும் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தொழிலாளி சம்மதம் தெரிவித்தார்.

கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.1,000-ஐ கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அவர் நேற்று ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று போர்மேன் முருகானந்தத்திடம் ரூ.1,000-ஐ வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments