புதுக்கோட்டையில் பரபரப்பு ரூ.82½ லட்சத்தை திருடிய தனியார் நிறுவன டிரைவர் தப்பியோட்டம் காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.75 லட்சம் பறிமுதல்; 2 பேர் கைது
புதுக்கோட்டையில் ரூ.82½ லட்சத்தை திருடிவிட்டு தனியார் நிறுவன கார் டிரைவர் தப்பியோடினார். காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரையும் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

புதுக்கோட்டையில் பெரியார்நகர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தினர் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்வது உள்பட பல்வேறு தொழில்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கார் டிரைவராக புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியை சேர்ந்த ராமன் (வயது 25) பணியாற்றி வருகிறார்.

இதே அலுவலகத்தில் மேற்பார்வையாளராக சதீஷ் என்பவர் பணிபுரிகிறார். இவர் நிறுவனத்தின் தொழில் ரீதியாக பணத்தை அடிக்கடி காரில் கொண்டு செல்வது வழக்கம் என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மேற்பார்வையாளர் சதீஷ் ரூ.82 லட்சத்து 67 ஆயிரத்தை 2 சாக்குப்பைகளில் வைத்து பணி தொடர்பாக பணம் வினியோகிக்க காரில் புறப்பட்டார். காரை டிரைவர் ராமன் ஓட்டினார். காரில் சதீஷ் மற்றும் அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோர் சென்றனர்.

ரூ.82½ லட்சத்துடன் தப்பியோட்டம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காருக்கு டீசல் நிரப்பினர். பின்னர் காரை சற்று தள்ளி நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சதீஷ் மற்றும் அவருடன் வந்த உதவியாளர் காரில் இருந்து இறங்கி சென்றனர். இதனால் காரில் டிரைவர் ராமன் மட்டும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இயற்கை உபாதை கழித்து விட்டு 2 பேரும் திரும்பி வந்தபோது கார் மட்டும் நின்றது. காரில் டிரைவர் இல்லை. மேலும் காரில் இருந்த பணப்பைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கார் டிரைவர் ராமன் ரூ.82 லட்சத்து 67 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து 2 பேரும் உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கும், நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காட்டுப்பகுதியில் பதுக்கல்

போலீசாரின் விசாரணையில், டிரைவர் ராமன் பணத்தை திருடிவிட்டு சற்று தள்ளி மற்றொரு காரில் நண்பர்களுடன் சேர்ந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, தப்பியோடிய டிரைவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தினர்.இதற்கிடையில் புதுக்கோட்டை அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய பூங்குடி பகுதியை சேர்ந்த செல்லமணி (19), புத்தாம்பூரை சேர்ந்த சண்முகம் (25) ஆகியோரை ேபாலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் டிரைவர் ராமனுடன் சேர்ந்தவர்கள் என்பதும், பணத்தை திருடியதில் அவர்களுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பணத்தை புதுக்கோட்டை புத்தாம்பூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ரூ.75 லட்சம் பறிமுதல்

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் காட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை மீட்டனர். அதில் ரூ.75 லட்சம் வரை இருந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லமணி, சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்காக அதிக அளவில் பணம் காரில் எடுத்து செல்லப்படுவதை டிரைவர் ராமன் நோட்டமிட்டுள்ளார். இதனால் அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு இந்த சம்பவத்தை ராமன் அரங்கேற்றியுள்ளார். இதற்காக தனது சகோதரர் லட்சுமணன், உறவினர்களான செல்லமணி, சண்முகம் ஆகியோரை பயன்படுத்தியுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பு

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேரில் ெசன்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்தையும் பார்வையிட்டார். தலைமறைவாக உள்ள ராமனையும், அவரது சகோதரரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் ரூ.82 லட்சத்துடன் டிரைவர் தப்பியோடியதும், அதில் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமன் பணிபுரியும் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments