இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆனா 4 கண்டிஷன் இருக்கே




இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு 4 கண்டிஷன்களையும் அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கொரோனா காலகட்டத்தில் உலகின் அனைத்து நாடுகளின் சுற்றுலாவும் மிகக் கடுமையாகப் பாதித்தன. குறிப்பாகப் பல நாடுகள் சுற்றுலாவை நம்பி இருந்த நிலையில், அவை கொரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கொரோனா முடிவுக்கு வந்த பிறகு, அந்த நாடுகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து செல்லும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்ப அதிர்ச்சியாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும் போது விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த பிப்.4ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய கண்டிஷன்களை ஈரான் அறிவித்துள்ளது.

1. சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.. அப்படி வரும் போது அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த 15 நாட்கள் என்பது நீட்டிக்க முடியாது

2. சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.

3. இந்தியர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது ஆறு மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெற வேண்டும்.


4. விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்று அறிவித்துள்ள ஈரான் அரசு, இந்த நான்கு கண்டிஷன்களை மட்டும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்தந்த நாடுகள் சமீபத்தில் அறிவித்தன. இந்தச் சூழலில் தான் இந்த லிஸ்டில் இப்போது ஈரானும் இணைந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று ஈரான். இது தனது கிழக்கே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உடனும், மேற்கே ஈராக் துருக்கி நாடுகள் உடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இஸ்லாமிய நாடான ஈரானின் மொத்த மக்கள் தொகை 8.80 கோடியாகும். அதேபோல அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே இதுவரை நல்லுறவு இருந்தே இல்லை. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளது. குறிப்பிடத்தக்கது.

மேலும், பல நாடுகளுக்கும் ஈரான் உடன் சுமுகமான உறவு இல்லை. ஈரான் எதிர்ப்பு மனநிலையில் இருந்து உலக நாடுகள் மாற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தும் நிலையில், அதற்குப் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஈரான் இப்போது விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும், இது இந்தியாவுக்கு மட்டுமானது இல்லை.

இந்தியா உடன் சேர்த்து ரஷ்யா, ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஈரான் வர விசா தேவையில்லை என்று சட்டத்திற்கு ஈரான் டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. உலக நாடுகள் ஈரான் மீதான பார்வையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் ஈரான் சுற்றுலாவை மேம்படுத்தவுமே இந்த நடவடிக்கையை ஈரான் எடுத்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments