பட்டுக்கோட்டை அருகே போடப்பட்ட 5 நாட்களில் பெயர்ந்து வரும் சாலை சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்




பட்டுக்கோட்டை அருகே போடப்பட்ட 5 நாட்களில் சாலை பெயர்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ரூ.18 லட்சத்தில் சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப் பிரிவு திட்டத்தின் கீழ் சமீபத்தில் மேலத்தெருவில் இருந்து மயானம் வரை முக்கால் கி.மீ. தூரத்திற்கு ரூ.18 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலை போடப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் வெறும் கை விரலால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் சாலை இருப்பதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரலாக பரவும் வீடியோ

இந்த வீடியோவில் அவர் தனது கைகளை கொண்டே சாதாரணமாக சாலையை பெயர்த்து எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சாதாரணமாக தார்ச்சாலைகளை கடப்பாரை கொண்டே உடைப்பது கடினம் என்ற நிலையில், கையை கொண்டு அழுத்தினாலே சாலை பெயர்ந்து வருவது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியிடம் கேட்டபோது, ‘நான் கடந்த 7-ந் தேதி தான் பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றேன். இந்த சாலைப்பணி நான் இங்கே வருவதற்கு முன்பாக டெண்டர் விடப்பட்டு பணி நடைபெற்று இருக்கலாம். இந்த சாலை ஆதிதிராவிடர் நலப்பிரிவு திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளதால் அது பற்றிய குற்றச்சாட்டு விரைவில் விசாரிக்கப்படும்’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments