கொள்ளை சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணி அதிகரிப்பு






கொள்ளை சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.

கொள்ளை சம்பவம்

திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட்டில் இருந்து தஞ்சாவூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையானது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பின்புறம் பகுதி வரையில் சாலையோரம் தைலமரம் உள்பட காட்டுப்பகுதியாகும்.

இதனால் இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் காரை நிறுத்தி விட்டு இறங்கி இயற்கை உபாதை கழிப்பவர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து செல்லும் மர்மகும்பல் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் அண்டகுளம் செல்லும் விலக்கு பகுதியில் தர்கா அருகே காரில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் சரண் அடைந்தார்.

இரவு நேரங்களில் ரோந்து

இந்த நிலையில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடைபெறுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் படி யாரேனும் சாலையோரம் காட்டுப்பகுதியில் சுற்றிதிரிகின்றனரா? என பார்வையிடுகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த சாலையில் வாகனங்கள் செல்வதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் மின் விளக்குள் கூடுதலாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments