பாம்பன் புதிய ரெயில் பால பணிகளை இந்திய ரெயில்வே வாரிய தலைவர் ஆய்வு




பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பால பணிகளை இந்திய ரெயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரெயில்வே வாரிய தலைவர்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில்வே பாலம் கட்டும் பணியானது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த பாலத்தையும், பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இந்திய ெரயில்வே வாரிய தலைவர் ஜெயவர்மா சின்கா நேற்று மதுரை வந்தார். இங்கிருந்து சிறப்பு ரெயில் மூலமாக மண்டபம் ரெயில்வே நிலையம் சென்று இறங்கினார். அங்கிருந்து கார் மூலமாக பாம்பன் சென்றார். அவருடன் ரெயில்வேத்துறை உயர் அதிகாரிகளும் சென்றனர்.

ஆய்வு

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைத்து வடிவமைக்கப்பட்டு மையப்பகுதியில் பொருத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தையும் ஆய்வு செய்தார்.

ெரயில்வேயின் கட்டுமான நிறுவனமான ஆர்.வி.என்.எல் அதிகாரிகள் தூக்குப்பாலத்தின் நீளம், உயரம், எடை, அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ரெயில்வே வாரிய தலைவரிடம் விளக்கி கூறினார்கள். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு ரெயில்வே வாரிய தலைவர், தனுஷ்கோடி சென்றார்.

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே மீண்டும் ரெயில் பாதை அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அமித்குமார் மனுவால், ரெயில்வே கட்டுமான பிரிவு முதன்மை தலைமை இயக்க மேலாளர் குமார், முதன்மை தலைமை பொறியாளர் தேஷ் ரத்தன் குப்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments