கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்





புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

வறட்சி மாவட்டமாக அறிவித்தல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். ராம.சுப்பையா பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான மழை இல்லாததால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும். கூட்டுறவு துறை அங்காடியில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்'' என்றார்.

நெல் மூட்டைகளை பாதுகாத்தல்

செல்லதுரை பேசுகையில், "உணவு தானிய சேமிப்பு கிடங்கை முறையாக பராமரிக்க வேண்டும். விவசாயத்திற்கு நெல் நடவு வேளாண் எந்திரங்களை கூடுதலாக வாங்க வேண்டும். மாவட்டத்தில் விளையும் முந்திரி பருப்பு கொட்டை நன்கு திரட்சியாக இருக்க ரகங்களையும், தேவையான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்'' என்றார்.

நடராஜன் பேசுகையில், "வறட்சி மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை உணவு தானிய சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

பயிர்காப்பீடு

கொக்குமடை ரமேஷ் பேசுகையில், "கல்லணை கால்வாய் பாசனபகுதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காதது, பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் சம்பா நெல் சாகுபடி மகசூல் குறைந்துள்ளது. எனவே பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கியில் இருந்து இடையாத்தூர், வேதியன்குடி, வேட்டனூர் வழியாக மணமேல்குடி வரையில் உள்ள வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும்" என்றார்.

மிசா மாாிமுத்து பேசுகையில், "காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்" என்றார்.

கோடை காலம்

தனபதி பேசுகையில், "மாவட்டத்தில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா பதில் அளித்து பேசுகையில், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் பகுதிகளில் குடிநீர் தொடர்பாக பிரச்சினை எதுவும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும். அதனை நிவர்த்தி செய்யப்படும். கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் குடிநீர் தொடர்பாக பிரச்சினை இருந்தாலும் வாட்ஸ்-அப் குரூப்பில் தகவல் தெரிவிக்கலாம். கால்நடைகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தெரிவித்த கோாிக்கைகள் துறைரீதியாக நிறைவேற்றப்படும்'' என்றார்.

இரங்கல்

கூட்டத்தில் முன்னதாக டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராஜேந்திரபிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments