துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி: அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்




அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை வசதி வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அறந்தாங்கி நகராட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய நகராட்சி அறந்தாங்கி ஆகும். வெளியூர்களில் இருந்து அறந்தாங்கி வழியாக 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பஸ்களும் அறந்தாங்கி நகரின் மையத்தில் உள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலையத்தின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. நகராட்சியால் பராமரிக்கப்படும் இந்த அறந்தாங்கி பஸ் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் கட்டப்பட்டுள்ள கடைகள் மூலமும், சைக்கிள்கள் நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடம் வருடாந்திர ஏலத்தின் மூலமும் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் வருகின்றன.

இலவச கழிவறைக்கு கட்டணம்

ஆனால் பஸ் நிலையத்திற்கு அந்த வருவாய் மூலம் எந்த வசதிகளும் இல்லை. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. பஸ் நிலையத்தின் தென்கிழக்கு பகுதியில் இலவச கழிவறையும், அதன் அருகில் கட்டண கழிவறையும் அமைக்கப்பட்டு இருந்தது.

கட்டண கழிவறை இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. கட்டணம் கொடுத்தும் கூட சுகாதாரம் இல்லாத நிலையில் இலவச கழிப்பிடமே பரவாயில்லை என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் இலவச கழிப்பிடம் சில தினங்களாக பூட்டு போடப்பட்டு இருந்தது. காசு கொடுத்து கட்டண கழிவறையை பயன்படுத்தி வந்த நிலையில் அந்த கழிவறைக்கு பூட்டு போட்டு இலவச கழிவறையை கட்டண கழிவறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

கோரிக்கை

வேறு வழி இல்லாமல் இலவச கழிவறைக்கு காசு கொடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அறந்தாங்கிக்கு வரும் பயணிகள், பஸ் நிலையத்துக்குள் அமைந்துள்ள கடைகளில் வேலை பார்ப்பவர்களின் நிலைமையும் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. வைப்புத்தொகையை அதிகப்படுத்த வேண்டும். வாடகை அதிகம் பெற நிர்பந்தம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் பேசி வருவது மட்டும் போதுமா? எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டாமா? என்று பஸ் நிலையத்தில் கடை ஏலம் எடுத்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே அறந்தாங்கி பஸ் நிலையத்தில் துர்நாற்றத்தை போக்கி இலவச கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments