‘டிரைவிங் லைசென்ஸ்’ தபால் மூலம் வினியோகம் புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




‘டிரைவிங் லைசென்ஸ்’ தபால் மூலம் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

50 புதிய பஸ்கள்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ரூ.20 கோடி மதிப்பில் 50 புதிய பஸ்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை கிண்டி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 50 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

‘கார்டு, யு.பி.ஐ.’ மூலம் பயணச்சீட்டு

மேலும் மாநகர் போக்குவரத்து கழக மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து மின்னணு பயணச்சீட்டு எந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

வேகமாகவும், எளிதாகவும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ரொக்கப் பணம், கார்டு அல்லது யு.பி.ஐ. மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்குவார்கள்.

இதேபோல் சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை ரூ.70 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. மூலம் தானியங்கி என்ஜினீயர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பொது முதலாள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

‘டிரைவிங் லைசென்ஸ்’

மேலும் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் போக்குவரத்து துறை சார்பில் ரூ.41.90 கோடியில் கட்டப்பட்ட போக்குவரத்து-சாலை பாதுகாப்பு ஆணையரக புதிய கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல பதிவுச்சான்று மற்றும் ‘டிரைவிங் லைசென்ஸ்’ ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 91 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்து ஒப்பளிக்கப்படும் பதிவுச் சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை இனி விரைவு தபால் மூலமாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை ஆணையர் சண்முகசுந்தரம், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண்மை இயக்குனர் க.குணசேகரன், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இரா.மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments