12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கனிவான கவனத்துக்கு! 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக மாணவர்களுக்கு GPM மீடியா சார்பாக சில முக்கியக் குறிப்புகள் இதோ:பொதுத்தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகி இன்று தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் சிறப்பாக தேர்வு எழுத GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களுடன் சில முக்கியக் குறிப்புகள் இதோ,

1. குறிப்பேடுகள் அவசியம்


ஆண்டு தொடக்கத்தில் இருந்து நீங்கள் எடுத்த பாடக் குறிப்புகளுக்கான குறிப்பேடுகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் தேர்விற்குப் படிக்கும்போது புத்தகத்தை ஒரு வரிகூட விடாமல் முழுவதையும் படிக்கப்போவதில்லை. முன்பே படித்த பாடங்களைதான் மீள்பார்வை செய்யப்போகிறீர்கள். எனவே முக்கியக் குறிப்புகளை மட்டுமே படித்தால் சாலச் சிறந்தவையாக இருக்கும்.

2. திட்டமிடுதல் வெற்றியைத் தரும்


வெற்றியை அடைய இலக்கு அவசியம். ஓர் இலக்கைத் தீர்மானித்தால்தான் அதை நோக்கிப் பயணித்து வெற்றியை அடைய முடியும். பொதுத்தேர்விற்கு முன்பு அதற்குத் தயாராக எத்தனை நாட்கள் உள்ளன, எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கடினம் என உணர்கின்ற பாடங்களுக்கு கூடுதல் நாட்களைப் படிப்பதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

3. நல்ல உறக்கம், நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும்


சில மாணவர்கள் தேர்விற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்காமல் படித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் தேர்வறைக்குச் செல்வதற்கு பத்து நிமிடங்களே உள்ள நிலையில்கூட புத்தகத்தைச் சுமந்தபடியே படித்துக் கொண்டிருப்பர். ஆண்டு முழுவதும் படிக்காததை இந்தக் கடைசி பத்து நிமிடங்களில் படித்து விடமுடியாது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு முந்தைய நாள் இரவு குறைந்தபட்சம் ஆறு மணிநேரமாவது உறங்க வேண்டும். இந்த 6 மணிநேர உறக்கம் உங்களைத் தேர்வறையில் சோர்வு இல்லாமல் சிறப்பாக எழுத உதவும்.

4. வதந்திகளை நம்ப வேண்டாம்


தேர்விற்கு முன்தினம் சமூக வலைதளங்கள் மூலமாக தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டது போன்ற வதந்திகள் பரப்பப்படும். இந்த வினாக்கள்தான் கட்டாயம் தேர்வில் கேட்கப்படும் என்பன போன்ற தேவையற்ற வதந்திகளை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். குறுக்கு வழியில் சென்று எப்போதும் வெற்றியைப் பெற முடியாது. எனவே, முழு நம்பிக்கையோடு பாடங்கள் முழுவதையும் படித்துவிட்டுத் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.

5. தேர்வு நாள்


தேர்வு நாளன்று மிகச் சீக்கிரமாக எழுந்து கொள்ளுங்கள். அன்றாடச் செயல்களைக் குறிப்பிட்டநேரத்திற்குள் முடித்துவிட்டு, கட்டாயம் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்து புறப்படுங்கள். வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தேர்வு நுழைவுச்சீட்டு (Hall ticket), தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (scale) போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டு தேர்விற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்தை அடையுமாறு வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்.

6. தேர்வு எழுதுவதற்கு முன்பு


தேர்வறைக்குச் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியாக உட்கார்ந்து 5 நிமிடம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்களை மூடி யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்ற ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டு அமைதியான மனநிலையில் தேர்வெழுதச் செல்லுங்கள்.

7. நேர மேலாண்மை


தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் விடைகளை எழுதத் தொடங்காமல் வினாத்தாளை ஒரு முறைக்கு இருமுறை வினாக்களை முழுவதுமாக வாசியுங்கள். அதுபோல முதலில் நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். மேலும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடங்கள், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு 40 நிமிடங்கள் என மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு விடைகளை எழுத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்தச் செயல்பாடு நீங்கள் சரியான நேரத்தில் சரியாக தேர்வினை முடிக்க உதவும்.

8. வினாத்தாள் பற்றிய கலந்துரையாடலைத் தவிர்த்தல்


ஒரு தேர்வு முடிந்ததும் அந்தத் தேர்வின் வினாக்களுக்கான விடைகளை நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்வது மாணவர்கள் மத்தியில் இயல்பாக நிகழக்கூடிய ஒன்று. ஆனால், முதல் தேர்வை நீங்கள் சரியாக எழுதவில்லை என்ற எதிர்மறை எண்ணத்துடன் அடுத்த தேர்விற்கு படிக்கும்போது முந்தைய தேர்வைப் பற்றிய எண்ணங்கள் மனதில் வந்துபோகும். அதுமட்டுமின்றி இது அடுத்துவரும் தேர்வுகளையும் பாதிக்கும். எனவே, வினாத்தாள் பற்றி கலந்துரையாடல் செய்வதை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.

தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

தேர்வு எழுத இருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றிபெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென கோபாலப்பட்டிணம் மீடியா (GPM மீடியா) சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

.முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்...!!!

தேர்வு என்பது மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. பள்ளிப் படிப்பில் தொடங்கி நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு என அனைத்திற்கும் அடித்தளமாகத் திகழ்வது தேர்வு ஒன்றுதான்.

எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதற்கானத் தேர்வுமுறை ஒன்று இருக்கும். எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதற்கு எப்படித் தயார் செய்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதாவது படிக்கும் முறைகள் சரியானதாக இருக்க வேண்டும்.

என்னதான் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் எப்படிப் படிப்பது? தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது?எப்படி அச்சத்தை எதிர்கொள்வது?எப்படி அதிக மதிப்பெண் பெறுவது? என பல்வேறு கேள்விகள் மற்றும் குழப்பங்கள் மாணவர்களிடையே உள்ளது. இதற்கு நம்மிடம் இருக்க வேண்டியது முயற்சியும் பயிற்சியும் ஆகும்.

தேர்வுக்கான தேதி நம்மை நெருங்க நெருங்க நம்முடைய உள்ளத்தில் அச்சமும் பயமும் நெருங்கும்.

தேர்வு தொடங்கிவிட்டது இனி புதிய பாடங்களைப் படிக்க நேரம் இருக்குமா..? வருடம் முழுவதும் படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வது நம்மால் முடியுமா..? ஏற்கனவே படித்தவற்றை மீண்டும் ஒரு முறை படிக்க மட்டுமே நேரம் உள்ளதா..? என பல்வேறு கேள்விகள் நமது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் இதற்குத் தீர்வு அச்சம் கொள்ளாமை ஆகும்.

தேர்வுக்கு எவ்வளவு தெளிவாகப் படித்திருந்தாலும்  அனைவருக்கும் தேர்வு எனும்போது ஒரு அச்சம் இருக்கும். அச்சத்தோடு தேர்வுக்கு செல்லும் போது படித்தது அனைத்தும் சில நேரங்களில் மறந்துவிடும். எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தேர்வை சரியாக எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன் செல்ல வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெறுவது மிக நீண்ட ஒரு பயணம். தேர்வுகளில் வெற்றி பெறுவது வாழ்க்கை என்னும் பயணத்தில் சிறு பகுதியாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்ற இந்த மூன்றும் இருந்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்.

தேர்வுக்கு எப்படிப் படிப்பது? தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? படித்தவற்றை எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்வது? இது போன்ற பல கேள்விகள் மாணவர்களின் மனதில் உள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெறுவது, முதல் மதிபெண் பெறுவது எல்லாம் மிகப் பெரிய செயல் அல்ல. அதற்கு முறையான பயிற்சி மற்றும் முயற்சி இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி அடைய முடியும்.

தேர்வுக்கு படிக்கும் போது நாம் படிக்கும் அனைத்தையும் புரிந்து படித்தல் வேண்டும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு புரிந்து படிகின்றோமா அது மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும். மேலும், தேர்வுக்கு தயார் செய்யும் போது தேர்வுக்கு உரிய பாடத்திட்டத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடநூலிலும் என்ன பாடங்கள்? எத்தனை பாடங்கள்? எந்த பாடத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற திட்டமிடுதல் வேண்டும்.

அந்தந்த பாடத்திட்டதிற்கு ஏற்ப நேரத்தை ஒதுக்க வேண்டும்.  ''கற்றலில் வெற்றி பெற திட்டமிடுதலே சிறந்த முறையாகும்''.

ஓய்வாக உள்ள நேரங்களில் மனப்பாடப் பகுதிகளை எடுத்து பார்த்தல் தேர்வில் மறக்காமல் எழுத உதவியாக இருக்கும். ஆங்கில பாடத்தின் வினா விடைகள், தமிழில் உள்ள செய்யுள் பகுதி வினாக்களுக்கான விடைகளை படிப்பதற்கு இந்த முறை பயன்படும். மேலும், தேர்வுகளில் முழு மதிப்பெண் மற்றும் வகுப்பில் முதல் மாணவராக வருவதற்கு பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்து அதன்பின் தெளிவாகப் படிக்க வேண்டும்.

படிப்பதற்கு மிகவும் முக்கியமானது இடம் மற்றும் நேரம் ஆகும். வீட்டில் படிக்கும்போது அறையில் தனிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது. இல்லையேல் வீட்டு்த் தோட்டம், வயல்வெளி இது போன்ற தனிமை மிகுந்த இயற்கையான சூழலில் படித்தல் மிகவும் நன்று. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கும் அமைதியான சூழலில் படிக்கும் போது நன்றாக மனதில் பதியும். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் நேரத்தைத் தவிர்த்துவிட்டு கணிதம் போன்ற கடினமாக பாடங்களை அவர்களுடன் கலந்துரையாடல் செய்து படிக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே, நம்முடைய வாழ்க்கையில்  முயற்சியும் ,பயிற்சியும் எப்படி முக்கியமோ அது போல தேர்விலும் அது மிக முக்கியமானதாகும். எனவே, குறுகிய நாட்களில் தேர்வுக்குத் தயாராக மாணவர்கள் விடாமுயற்சியுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை எதிர்கொள்ள இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்விலும், வாழ்விலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments