தொண்டியில் மீனவ பெண்களுக்கான கடல்பாசி வளர்ப்பு பயிற்சி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி வைத்தார்




காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கடலியல் துறை சார்பில் தொண்டியில் நடந்த மீனவ பெண்களுக்கான கடல்பாசி வளர்ப்பு பயிற்சி முகாமை பல்கலைக்கழக பதிவாளர் தொடங்கி வைத்தாதர்.

மீனவ பெண்களுக்கு பயிற்சி

தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை மற்றும் தொண்டி அன்பாலயா கடல் சார்ந்த மீனவ உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மீனவ பெண்களுக்கான கடல் பாசி வளர்ப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் செந்தில் ராஜன் தலைமை தாங்கினார். கடலியல் மற்றும் கடலோரவியல் துறை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் கடலியல் துறை இணை பேராசிரியர் பரமசிவம் வரவேற்றார்.

விழாவில் ராமநாதபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் கோபிநாத், மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடல்பாசி ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி வீரகுருநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் செந்தில் ராஜன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

வாழ்வாதாரம் உயர

தொடர்ந்து அவர் அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை மற்றும் தொண்டி அன்பாலயா கடல் சார்ந்த மீனவ உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பாசிப்பட்டினம் மீனவ பெண்களுக்கான மீன்பிடிவலை பின்னுதல் பயிற்சி நிறைவு விழாவையொட்டி பயிற்சி பெற்ற பெண்களால் பின்னப்பட்ட மீன்பிடி வலைகளை பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் துறை மீனவ மக்களுக்காக இது போன்ற ஏராளமான பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறது.

இந்த பயிற்சிகளில் மீனவ பெண்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வர வேண்டும். கடல்பாசி வளர்ப்பு, மீன்பிடி வலை பின்னுதல் போன்ற பல்வேறு கட்ட பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு அழகப்பா பல்கலைக்கழகம் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது என்றார்.

உபகரணங்கள்

அதன்பின்னர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற 40 மீனவ பெண்களை பாராட்டினார். தொடர்ந்து கடல்பாசி வளர்ப்பு பயிற்சியில் பயிற்சி பெற உள்ள காரங்காடு, மோர்ப்பண்ணை, தொண்டி, புதுக்குடி மீனவ கிராமங்களை சேர்ந்த 30 மீனவ பெண்களுக்கு கடல்பாசி வளர்ப்பதற்கான உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அன்பாலயா கடல் சார்ந்த மீனவ உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சவேரியார், செல்வி சவேரியார், பயிற்றுனர்கள் முத்து நெய்னார், செங்கோல், கடலியல் துறை உதவி பேராசிரியர்கள், மீனவ பெண்கள், கடலியல் துறை மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலியல் துறை இணை பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments