மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வரின் முகவரி துறையின் கீழ், புதுமை திட்டமான “நீங்கள் நலமா" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.




ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம் ஒரு ரூபாய்கூட தரவில்லை மக்களுக்கு நேரடியாக வழங்கியதாக சொல்வதா? பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்
‘நீங்கள் நலமா?’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெள்ள நிவாரணத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்குமாறு கேட்டோம். ஆனால் ஒரு ரூபாய்கூட தராமல், மக்களுக்கு நேரடியாக வழங்கியதாக பிரதமர் மோடி அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்று ‘நீங்கள் நலமா?’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசின் நலத்திட்டங்கள், மக்களுக்கு விரைவாக சென்றடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

‘நீங்கள் நலமா?’ திட்டம்

அந்தவகையில், முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் கீழ் பயனாளிகளை தொடர்பு கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்தை கேட்டறியும் ‘நீங்கள் நலமா?’ திட்டத்தை சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டம். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம்.

மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் அனைவருக்கும் வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.

ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ளன

என்னை சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில், அரசுத் திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1.15 கோடி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை; விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்கள் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ.888 வரை சேமிப்பு; மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ஒரு கோடிப் பேருக்கு பயன்;

காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்களுக்கு சிற்றுண்டி; புதுமைப்பெண் திட்டத்தால் 4.82 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பட்டதாரியாக உருவாக்கம்; நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு; இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 24.86 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு பயன்:

62.40 லட்சம் குடும்பங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு; 2 லட்சம் உழவர்களுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு; உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தினால் 30 லட்சம் முதியோருக்கும், 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் பயன்; நம்மைக் காக்கும் 48 திட்டத்தால் 2 லட்சம் பேரின் உயிர்களை காப்பாற்றியது;

முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தினால் 19.69 லட்சம் பேருக்கான மனுக்களுக்குத் தீர்வு: மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலமாக 3.40 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு, என ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளன.

குடும்ப ஆட்சிதான்

எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம், இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னிடம் வழங்கப்பட்டு, அவற்றை அரசு நிறைவேற்றிக் கொடுத்ததால் இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை, மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

நீங்கள் நலமா? திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடினேன். அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி, நலத்திட்டங்கள் குறித்து கருத்துகளை பெற்று, அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். உங்களின் கருத்துகள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

அப்பட்டமான பொய்

ஒவ்வொரு திட்டத்தின் நோக்கமும் நிறைவேற்றப்பட்டு வருகிறதா? என்பதுதான் எனக்கு முக்கியம். ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொருவரையும் சென்று சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்.

மத்திய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக பிரதமர் மோடி அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லியுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா? என்று கேட்கலாம்.

2 மாபெரும் இயற்கை பேரிடரை 8 மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். அதற்காக கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா? இப்படியா பொய் சொல்வது? மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த 8 மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து ரூ.3,406.77 கோடி அளவுக்கு நிதி வழங்கி, நிவாரணப் பணிகளைச் செய்து மக்கள் நலம் காக்கப்பட்டது. மக்கள் நலனைக் காக்கும் மற்றுமோர் அடையாளம்தான் நீங்கள் நலமா திட்டம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments