மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் மின்வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் ஊரக, நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, குடிநீர் பற்றாக்குறையை போக்கிட தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும், குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் முதற்கட்டமாக திறந்த வெளி கிணறுகள் அமைக்கவும், குடிநீர் வினியோகம், மின் மோட்டார்கள் பழுது இருந்தால் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்திடவும் வேண்டும்.

ஆழ்குழாய் கிணறு

மேலும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்திடவும், குறிப்பிட்ட நேரத்திற்கு குடிநீர் வழங்கவும், குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்கவும், நீர்மட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குடியிருப்புகளுக்கு கடைசி வீடு வரை குடிநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரான குடிநீர்...

குடிநீர் தேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கி குடிநீர் பற்றாகுறையை போக்கிட தொடர்புடைய அலவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், நகராட்சி ஆணையர் ஷியாமளா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அய்யாசாமி, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜான்பீட்டர் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments