4 நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் புதுக்கோட்டை வாக்காளர்கள்




புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற தொகுதி என்ற அந்தஸ்து இருந்து வந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பில் பறிபோனது. மேலும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் சேர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம் பிடித்துள்ளது.

ஆக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இணைந்து இருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் இம்மாவட்ட வாக்காளர்கள் திகழ்கின்றனர்.

களத்தில் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல்களில் பிரசாரத்தின்போது இம்மாவட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிகம் வருகை தருவது உண்டு. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும் தொகுதி பக்கம் வந்து செல்வது உண்டு. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கடந்த ஓரிரு மாதங்களாக எம்.பி.க்கள் அடிக்கடி இங்கு வந்து சென்றனர்.

ஓரிரு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், மக்களிடம் மனுக்களை பெற்றும் வருகின்றனர். இதேபோல அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி என சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தி பங்கேற்று வருகின்றனர். மக்களின் வாக்குகளை கவர களத்தில் தங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வாக்குப்பதிவு அதிகரிப்பு

கடந்த 2009, 2014, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பெருமளவு பதிவாகி உள்ளன. மேலும் வாக்குப்பதிவும் அதிகரித்துள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது.

இதில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 66 வாக்காளர்களும், கந்தர்வகோட்டை தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 1 வாக்காளர்களும் வாக்களித்து உள்ளனர். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 472 வாக்குகளும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 790 வாக்குகளும் பதிவானது.

சிவகங்கை தொகுதி

இதேபோல சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது. இதில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 771 வாக்குகளும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 634 வாக்குகளும் பதிவானது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 448 வாக்காளர்களும், ஆலங்குடி தொகுதியில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 37 வாக்காளர்களும் வாக்களித்து இருந்தனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் அறந்தாங்கி தொகுதியில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 25 வாக்குகளும், 2019-ம் ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 435 வாக்குகளும் பதிவானது.

விராலிமலை

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது. இதில் 2014-ம் ஆண்டில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 733 வாக்காளர்களும், 2019-ம் ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 370 வாக்காளர்களும் வாக்களித்து இருந்தனர்.

இந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அந்த 4 தொகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்குப்பதிவு அதிகரிக்குமா? என்பது தேர்தலின்போது தெரியவரும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments