நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்




மேற்கு வங்காளத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் இயங்கும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

ஹூக்ளி நதி

இந்திய பெருநகரங்களின் போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெரும்பாலும் நிலத்துக்கு மேலேயும், நிலத்துக்கு அடியிலும் இயங்கி வருகிறது.

ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தில் நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற ஹூக்ளி நதியில் நீருக்கடியில் இந்த சேவைக்கான கட்டுமானப்பணிகள் நடந்தது.

கொல்கத்தாவின் எஸ்பிளனேடு முதல் ஹவுரா மைதானம் வரை 4.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டது. இதில் 520 மீ. தொலைவுக்கு ஹூக்ளி நதிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.4,960 கோடியில் நடந்த இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது.

பிரதமர் மோடி பயணம் செய்தார்

இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் எஸ்பிளனேடு முதல் ஹவுரா மைதானம் வரை அந்த ரெயிலிலேயே அவர் பயணம் செய்தார். பின்னர் அங்கிருந்து எஸ்பிளனேடுக்கு அதே ரெயிலில் திரும்பி வந்தார்.

அவருடன் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் பயணம் செய்தனர். அவர்களுடன் கலந்துரையாடியவாறே பிரதமர் பயணம் செய்தார். மேலும் இந்த பயணத்தில் மாநில பா.ஜனதா நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஹூக்ளி நதியின் கிழக்கு கரையில் இருக்கும் கொல்கத்தாவையும், மேற்கு கரையில் இருக்கும் ஹவுராவையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த மெட்ரோ ரெயில், சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதுடன் எளிதான இணைப்பு வசதியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆழமான ரெயில் நிலையம்

இந்த பாதையில் வரும் ஹவுரா மெட்ரோ ரெயில் நிலையம் நாட்டிலேயே மிகவும் ஆழமான ரெயில் நிலையமாக கருதப்படுகிறது. அந்தவகையில் தரையில் இருந்து 32 மீ. அடியில் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹூக்ளி நதிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 520 மீ. சுரங்கப்பாதையை சுமார் 45 வினாடிகளில் ரெயில்கள் கடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழித்தடம் மேற்கு வங்காளத்தின் கிழக்கு-மேற்கு தாழ்வாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த தாழ்வாரப்பணிகள் கடந்த 2009-ம் அண்டு ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. ஆனால் பல்வேறு இடையூறுகளால் இந்த பணிகள் தாமதமானது.

இந்த தாழ்வாரத்தில் எஸ்பிளனேடு-சியால்டா இடையேயான பணிகள் மட்டுமே மீதமிருப்பதாக மெட்ரோ ரெயில்வே பொது மேலாளர் உதய் குமார் தெரிவித்தார். நீருக்கடியில் இயங்கும் முதலாவது மெட்ரோ ரெயில் திட்டத்துடன் மாநிலத்தில் மேலும் பல்வேறு மெட்ரோ ரெயில் திட்டங்களை நேற்று அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments