மல்லிப்பட்டினத்தில் குழந்தையை கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர் கைது




தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில்
குழந்தையை கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மல்லிப்பட்டினம் கிராமத்தில் நேற்று முன்தினம் 9 வயதுள்ள ஒரு சிறுமியை சில அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து கடத்த முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.

இதனைத்தொடர்ந்து தஞ்சை சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகளுக்கான உதவிக்கரங்கள் கண்காணிப்பாளர் அஜிதா மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

முன்னுக்குப்பின் முரணான தகவல்

இதனை தொடர்ந்து மேற்படி சிறுமியிடம் விசாரணை செய்தபோது அந்த சிறுமி முன்னுக்குபின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மற்றும் அருகில் குடியிருந்தவர்களை விசாரணை செய்தனர்.அப்போது காலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் எந்த காரும் நின்றதாக தெரியவில்லை என்றும், மேற்கண்டவாறு எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் கூறினர்.

முகநூலில் வீடியோவாக பதிவேற்றம்

சமூக வலைதளங்களில் இதனை பதிவேற்றம் செய்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ஜாபர் சாதிக்(வயது 38) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது சம்பவத்தன்று மல்லிப்பட்டினம் காதிரியார் தெருவை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அடுத்த தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து காரில் ஏறும்படி வற்புறுத்தியதாகவும், இதனால் பயந்து வீட்டிற்கு ஓடி வந்ததாகவும் கூறினார்.

மேற்படி விவரத்தினையும், சிறுமி தெரிவிக்காத தகவல்களையும் மிகைப்படுத்தி சிறுமி கடத்தல் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேரடி வீடியோவாக பதிவேற்றம் செய்ததாக கூறினார்.

வதந்தி பரப்பியவர் கைது

இதுபோல் வதந்தியை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் மேற்கண்ட ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோன்று பொதுமக்களிடையே யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments