வேளாங்கண்ணி டூ கோவா எக்ஸ்பிரஸ்... புதிய LHB பெட்டிகளில் இவ்ளோ வசதிகளா? புருவத்தை உயர்த்திய ரயில் பயணிகள்!




தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் வேளாங்கண்ணி டூ கோவா ரயிலின் அப்கிரேட் வசதி இடம்பெற்றுள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில் புதிய பயணத்திற்கு பலரும் தயாராகி விட்டனர்.

தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் வேளாங்கண்ணி டூ கோவா ரயிலின் அப்கிரேட் வசதி இடம்பெற்றுள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில் புதிய பயணத்திற்கு பலரும் தயாராகி விட்டனர்.

வேளாங்கண்ணி - கோவா எக்ஸ்பிரஸ்

அதில் 17315 என்ற எண் கொண்ட வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ், 17316 என்ற எண் கொண்ட வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா ஆகியவை அடங்கும். இவற்றில் சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சாதாரண ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் எல்.எச்.பி பெட்டிகள் சேர்த்து இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி ரயிலில் மார்ச் 4ஆம் தேதியில் இருந்தும், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா ரயிலில் மார்ச் 5ஆம் தேதியில் இருந்தும் எல்.எச்.பி பெட்டிகள் சேர்க்கப்பட்டு இயக்கப்படும். அதன்படி, இரண்டு ரயில்களும் புத்துயிர் பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இந்த ரயிலில் ஏசி டூ டயர் கோச் 1, ஏசி த்ரீ டயர் கோச் 3, ஏசி த்ரி டயர் எகானமி கோச் 3, ஸ்லீப்பர் கிளாஸ் கோச் 8, ஜெனரல் செகன்ட் கிளாஸ் கோச் 3, லக்கேஜ் வசதியுடன் கூடிய பிரேக் வேன் 2 ஆகிய பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றின் தரம் தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையின் மூலம் எல்.எச்.பியாக மாற்றப்பட்டுள்ளது. ஆமாம். அது என்ன எல்.எச்.பி பெட்டிகள்? என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். ஜெர்மனியை சேர்ந்த லிங்கே ஹாப்மன் புச் (Linke Hofmann Busch- LHB) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் தான் எல்.எச்.பி என்று அழைக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே மிகவும் எடை குறைவான மற்றும் அதிவேகத்தில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் பெட்டிகளை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக பல்வேறு நாடுகளை உற்றுநோக்கியதில் ஜெர்மனியை சேர்ந்த எல்.எச்.பி பெட்டிகள் பெரிதும் கவனம் ஈர்த்தன.

ஜெர்மனி டூ இந்தியா

இதே மாடலில் இந்தியாவில் பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக முதலில் ஜெர்மனி நிறுவனத்துடன் இந்திய ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து ரயில் பெட்டிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதன்பிறகு பஞ்சாப் மாநிலம் காபுர்தலா, சென்னை ஐ.சி.எஃப், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய நகரங்களில் தயாரிப்பு தளங்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்து தயாரிக்கப்பட்டு இந்திய ரயில்வேயில் படிப்படியாக எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

என்னென்ன வசதிகள்

இந்த வகை பெட்டிகள் அதிக பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் இட வசதி கொண்டவை. திடீர் பிரேக் போடும் போது பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதாத வகையில் உயர் தரத்தில் கப்ளர்கள் போடப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகு உலோகத்தால் செய்யப்பட்டவை. உட்புறத்தில் அலுமினிய பூச்சு பூசப்பட்டுள்ளது. வழக்கமான பெட்டிகளை விட எடை பெரிதும் குறைவாக இருக்கும். அதிக வேகத்தில் பயணிக்க முடியும். இதன் சஸ்பென்ஷன் அமைப்பு பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தை அளிக்கிறது. ரயில் பயணங்களின் போது வெளியிடும் ஒலி மாசுபாட்டை பெரிதும் குறைக்கிறது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments