அதிராம்பட்டினம் கடற்கரையில் அமைச்சர் ஆய்வு




தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வாழைக்குளத்தை சில நாட்களுக்கு முன்பு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தின்(கைஃபா) உதவியுடன் தூர்வாரி மீட்டெடுத்தது. மேலும் கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளும் அதிரையில் உள்ள பிற அமைப்புகளின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தூர்வாரப்பட்ட கடற்கரைத்தெரு வாழைக்குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனருகே மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அதிரை கடற்கரை மேம்பாட்டு பணியை ஆய்வு செய்யவும் இன்று 10/03/2024 ஞாயிற்றுக்கிழமை பகல் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அதிரைக்கு வருகை தந்தார்.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், வாழைக்குளத்தை பார்வையிட்டு, அதனருகே மரக்கன்றுகளை நட்டார் அமைச்சர் மெய்யநாதன். மரங்களை நட்டு வைத்து விழா சிறப்புரையாற்றிய அமைச்சர், கடற்கரையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கைகள் பல மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக அரசு 250 கோடியில் 32 திட்டங்கள் அடங்கிய தொகுப்பு வகுக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரையும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாக கூறினார். மேலும் ப்ளாஸ்டிக் பயன்பாட்டால் கடல் வளம் அழிந்து வருவதாகவும், மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை போல, கடல் வளம் மீட்பிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். மரங்கள் எவ்வாறு ஆக்சிஜனை வழங்குகிறதோ அதே போல்தான் கடலும் ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது என்றார்.


இவ்விழாவில் கைஃபா அமைப்பின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளருமான கார்த்திகேயன் வேல்சாமி, கைஃபா அமைப்பின் செயலாளர் பிரபாகரன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ரமேஷ், PST Forum மாவட்ட தலைவர் Ln. T.P.K. ராஜேந்திரன்,  கடற்கரைத்தெரு ஜமாஅத், சம்சுல் இஸ்லாம் சங்கம், SISYA, அதிராம்பட்டினம் அரிமா சங்கம், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் மற்றும் அதிறையைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மெய்யநாதனிடம், அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையை கடற்கரைத் தெரு ஜமாஅத், தீனுல் இஸ்லாம் சங்கம், சம்சுல் இஸ்லாம் சங்கம், தமுமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மனுவாக அளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments