எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் உள்பட 22 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 7 உள்பபட 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

விசைப்படகில்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து 74 விசைப்படகுகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த பத்மநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 53), அகிலன் (18), கோடி மாரி (65), ஷேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40) ஆகிய 6 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (24) என்பவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

7 பேர் கைது

இவர்கள் கடலில் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மேலும் அங்கு அவர்கள் மீனவர்களிடம் விசாரணை நடத்தி ஊர் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் விசைப்படகு மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால், தமிழக மீனவர்கள்

இதேபோல் புதுவை மாநிலம் காரைக்கால் கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்தவர் செல்வமணி. மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல்மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் தமிழக பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன்.நாகையை சேர்ந்த செந்தில், கூழையூர் காளிதாஸ், ஸ்ரீராம், பெருமாள்பேட்டை புலவேந்திரன், கவியரசன், சிங்காரம், செருதூர் நவீன்குமார், பொன்னான்திட்டு நவீன் ஆகிய 15 மீனவர்கள் கடந்த 6-ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

துப்பாக்கி முனையில் கைது

இலங்கைக்கு அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் நேற்று அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 15 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களின் விசைப்படகு, அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு

தகவல் அறிந்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ பஞ்சாயத்தார் தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமுருகனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டு இருந்தது. இது குறித்து மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதிஅளித்தார். காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments