பயணிகளை ஏற்றுவதில் போட்டி: அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் புரட்டி எடுத்த தனியார் பஸ் ஊழியர்கள் போலீசார் வலைவீச்சு




பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் புரட்டி எடுத்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனியார் பஸ் ஊழியர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு-தனியார் பஸ்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 47). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார்.

அந்த பஸ்சை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்தார். இந்த பஸ்சை பின்தொடர்ந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை தஞ்சையை அடுத்த கணபதியக்ரஹாரம் புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(29) ஓட்டினார். அதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த சசிக்குமார்(39) கண்டக்டராக பணியில் இருந்தார்.

பயணிகளை ஏற்றுவதில் போட்டி

அப்போது அரசு பஸ்சுக்கும், தனியார் பஸ்சுக்கும் பாப்பாநாடு பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகளை ஏற்றுவதில் போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில் அதிகளவு பயணிகளை அரசு பஸ்சில் ஏற்றியதாக தெரிகிறது.

இதனால் பின் தொடர்ந்து வந்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அரசு பஸ்சை மறித்து டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் தனியார் பஸ்சுக்கு சாலையில் முந்துவதற்கு இடம் கொடுக்காமல் அரசு பஸ் டிரைவர் ஓட்டி வந்து உள்ளார்.

அரசு பஸ் கண்டக்டரை நடுரோட்டில் புரட்டி எடுத்தனர்

இதனால் தனியார் பஸ் டிரைவரான மணிகண்டன் மற்றும் கண்டக்டர் சசிக்குமார் ஆகிய இருவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பஸ்சை பின்தொடர்ந்து வந்தனர்.

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் அரசு பஸ் பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. அப்போது அரசு பஸ் டிரைவர் மணிகண்டனிடம் தனியார் பஸ் ஊழியர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அதைப்பார்த்த அரசு பஸ் கண்டக்டர் மாரியப்பன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

அப்போது அவர்களது ஆத்திரம் மாரியப்பன் மீது திரும்பியது. மணிகண்டன் மற்றும் சசிக்குமார் இருவரும் தகாத வார்த்தைகளால் மாரியப்பனை திட்டியதுடன் அவரை சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள் மாரியப்பனை கீழே தள்ளி நடுரோட்டில்டி ேபாட்டு புரட்டி எடுத்தனர்.

படுகாயம்

அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து தனியார் பஸ் ஊழியர்களிடம் இருந்து அரசு பஸ் கண்டக்டரை மீட்டனர். இந்த தாக்குதலில் மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மாரியப்பனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இது குறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் மணிகண்டன் மற்றும் கண்டக்டர் சசிக்குமார் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சையில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments