தேவிபட்டினத்தில் மின்கம்பியை மாற்றி அமைக்க லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் அதிரடி கைது! பெண் பொறியாளரிடம் தீவிர விசாரணை!!



மின் கம்பியை மாற்றி அமைக்க லஞ்சம் வாங்கியதாக 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மின்கம்பியை மாற்ற லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியை சேர்ந்தவர் முகம்மது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லக்கூடிய மின் கம்பியை மாற்றித்தர வேண்டுமென சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தார். இருப்பினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் தேவிபட்டினம் உதவி மின் பொறியாளரிடம் மின் கம்பியை மாற்றித்தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது அவர் ரூ.42 ஆயிரத்து 900ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு வாருங்கள் என தெரிவித்துள்ளார். உடனே ஆன்லைன் மூலம் பணத்தை கட்டி விட்டு அதன் ரசீதை பிலால் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கொடுத்தார்.

ரூ.9 ஆயிரம்

இந்த நிலையில் தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ்பாபுவை(வயது 47) சந்தித்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் மின்கம்பியை மாற்றும் பணி தொடங்கவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அவர் பணி விரைந்து நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரம், ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் என மொத்தம் ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என முகம்மது பிலாலிடம் கூறினாராம்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிலால் உடனடியாக இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

2 பேர் கைது

போலீசாரின் ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.9 ஆயிரத்துக்கான பண நோட்டுகளை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் முகம்மது பிலால் கொடுத்தார். அதில் ரூ.3 ஆயிரத்தை மட்டும் பெற்றுக்கொண்ட அவர் மீதம் உள்ள 6 ஆயிரம் ரூபாயை மின் ஊழியர் (வயர்மேன்) கந்தசாமியிடம்(53) கொடுங்கள் என தெரிவித்தார். மீதி பணத்தை அவரிடம் பிலால் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி (38) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதி அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments