கந்தவர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: ஆய்வறிக்கை முடிவு 5 நாட்களில் கிடைக்கும் என அதிகாரிகள் தகவல்!



கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கை முடிவு 5 நாட்களில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் தொட்டியில்மாட்டு சாணம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் ஆதிதிராவிட மக்கள் உள்பட பலர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் கலங்கலாக வந்தது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், நீர்த்தேக்க தொட்டியில் இருந்த கழிவுகளை சேகரித்து திருச்சியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை முடிவு 5 நாட்களில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ முகாம்

இந்தநிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வந்த குடிநீரை குடித்த பொதுமக்களுக்கு புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் வெள்ளாள விடுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தி சிகிச்சை அளித்தனர்.

இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 20 போலீசார் கொண்ட குழுவை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

போலீசார் பாதுகாப்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- குருவாண்டான் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக மாதந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறதா? மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட தேதி உள்ளிட்டவை அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். தற்போது இப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments