மருத்துவ மேற்படிப்பு முடித்த பிறகு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்ற முடியாது என்று மறுக்கக்கூடாது! டாக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!



அரசின் செலவில் சிறப்பு மருத்துவம் பயிலும் டாக்டர்கள், படிப்பு முடிந்த பிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற முடியாது என மறுப்பு தெரிவிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் மருத்துவ மேற்படிப்பு முடித்த பிறகு, 2 ஆண்டுகள் கட்டாயம் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த டாக்டர்கள் பிரியங்கா, பரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர் ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அதில், தாங்கள் கொரோனா காலக்கட்டத்தில் இக்கட்டான சூழலில் ஆற்றிய பணியை கணக்கில் கொண்டு தங்களை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக்க வேண்டும். எங்களது சான்றிதழ்களை திருப்பித்தர மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய டாக்டர்களின் கோரிக்கையை ஐகோர்ட்டு பரிசீலித்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில், கொரோனா காலகட்டம் என்பது நெருக்கடியான அவசர காலம். மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்களும் அப்போது பணியாற்றினர். அதற்காக அவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என அரசு எந்த அறிவிப்பும் வழங்கவில்லை’’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ மேற்படிப்பில் சேரும்போது அரசு விதிக்கும் நிபந்தனைகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் டாக்டர்கள், படிப்பு முடிந்தபிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் காலத்தை குறைக்க வேண்டும் என சலுகை கோருவதை ஏற்க முடியாது. உத்தரவாதம் அளித்துள்ளபடி அரசு ஆஸ்பத்திரிகளில் தங்களது பயிற்சி காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
 
சிறப்பு மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதற்காக அரசு பெரும் தொகையை செலவிடுகிறது. அரசின் செலவில் சிறப்பு மருத்துவம் பயிலும் டாக்டர்கள், படிப்பு முடிந்த பிறகு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற முடியாது என மறுப்பு தெரிவிக்கக்கூடாது.

ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது அல்ல. வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments